ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டு கொல்லுங்கள்: முதல்வரின் பேச்சால் பரபரப்பு

செவ்வாய், 25 டிசம்பர் 2018 (09:38 IST)
கொலையாளிகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லுங்கள் என பொது இடத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி செல்போனில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஹொன்னலகரே பிரகாஷ் நேற்று வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல்வர் குமாரசாமி உடனே சம்பவ இடத்திற்கு வந்து கொலையாளிகளை ஈவு இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று செல்போனில் ஒருவரிடம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரின் இந்த செல்போன் பேச்சை அங்கிருந்த மீடியாக்காரர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி ஒரு முதல்வரே சட்டத்தை கையில் எடுத்து இப்படி பேசலாமா? என்ற சர்ச்சை ஏற்பட்டது.

இதனையடுத்து ஹொன்னலகரே பிரகாஷ் கொலை செய்யப்பட்டதால் உணர்ச்சிவசத்தில் அப்படி பேசிவிட்டதாகவும் அது ஒரு முதல்வரின் உத்தரவு அல்ல என்றும், கொலையாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்றும் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்