தமிழ்.வெப்துனியா.காம்: ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் நிறம், திசை, உலோகம், பூ, தாணியம், வஸ்த்திரம், தீபம் என்று எத்தனையோ விஷங்களைச் சொல்கிறீர்களே, இதன் அடிப்படை என்ன?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: இதையெல்லாம் சித்தர்கள்தான் ஞான திருஷ்டியில் பார்த்துச் சொல்லியிருக்கிறார்கள். அறிவியல் அறிஞர்கள் பல பில்லியன் டாலர்கள் செலவு செய்து சாட்டிலைட் அனுப்பி செவ்வாய் சிவப்பாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் இங்கே உட்கார்ந்துகொண்டே செவ்வாய் சிவப்பு என்று சொல்லியிருக்கிறார்கள். செவ்வாய் என்றால் செந்நிறமான கிரகம் என்று பொருள்.
பிறகு அறிவியல் அறிஞர்கள் அந்த நிறத்தைத் தருவது இரும்புத் தாதுக்கள். பெரஸ் ஆக்சைட் அங்கு நிறைய இருப்பதால் செவ்வாயிலுள்ள இரும்புத் துகள்களில் அது பிரதிபலிக்கிறது. அதனால் செவ்வாய் சிவப்பாகத் தெரிகிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இதை நம்முடைய சித்தர்கள் ஞான திருஷ்டி - அதாவது தூரத்திலுள்ளவற்றையும் உணர்ந்தறியும் திறன் - என்று சொல்வார்களே அதன் மூலமாகவே பார்த்து சொல்லியிருக்கிறார்கள். சித்தர்கள் கண்டம் விட்டு கண்டம், உலகம் விட்டு உலகம், மேலேழு உலகம், கீலேழு உலகம் இதிலெல்லாம் சஞ்சரிக்கக்கூடிய அட்டமா சித்திகள் எல்லாம் அவர்களுக்கு இருந்திருக்கிறது. அதன் அடிப்படையில்தான் சித்தர்கள் இதனையெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.
பிறகு வந்த ஆரிய பாஸ்கர், ஆரியபட்டர் இவர்களெல்லாம் இதனை ஆமோதிக்கிறார்கள். இன்றைக்கு நாசாவில் இருந்து எல்லாவற்றையும் அனுப்பி அதனையே ஒப்புக் கொள்கிறார்கள். இதையெல்லாம் நமது சித்தர்கள் கண்டுபிடித்தது. அந்த கிரகத்தினுடைய வைப்ரேஷனை உணர்ந்து அந்தத் தொடர்பில் சித்தர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.