வயல்வெளியில் பாம்பு இருந்தால் விவசாயிக்கு அதிர்ஷ்டம் எனபது உண்மையா?

பொதுவாக நாக வழிபாடு கற்காலம் முதலே இருந்து வந்துள்ளது. மேலும் பாம்பை அடிக்கவோ, அதனுடன் பகை வளர்க்கவோ கூடாது என ஔவையாரும் தனது பாடலில் வலியுறுத்தியுள்ளார்.

வயல்களில் வெள்ளக் குன்னை ரக கதிர்கள் இருந்தால் எலிகளும் ஏராளமாக இருக்கும். இதற்கு காரணம் வெள்ளக் குன்னையின் கணு அவ்வளவு இனிப்பாக இருக்கும். அந்த இனிப்புத் தன்மை சூல்பிடிக்கும் தருணத்தில்தான் இருக்கும். மற்ற தருணத்தில் இருக்காது.

அந்தக் குறிப்பிட்ட தருணத்தில்தான் எலியும், சாரைப் பாம்பும் பயிரை வெட்டி நாசம் செய்யும். அதே தோட்டத்தில் நல்ல பாம்பு இருந்தால், சாரையை விரட்டுவதுடன், எலிகளையும் துவாம்சம் செய்யும். எனவே, நல்ல பாம்பு அறுவடை சமயத்தில் இருப்பது விவசாயிகளுக்கு பலனை அளிக்கும்.

எனக்குத் தெரிந்த விவசாயி ஒருவர் வயல்வெளியில் விவசாயம் செய்வத‌ற்காக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால் அவரது நிலத்தில் எந்த இடத்தில் துளையிட்டாலும் தண்ணீர் கிடைக்கவில்லை.

ஒரு கட்டத்தில் அதிருப்தியடைந்த அவர் கடைசியாக ஆழ்துளை கிணறு தோண்டிய இடத்திலேயே அதற்குப் பயன்படுத்தப்பட்ட குழாய் உள்ளிட்ட உபகரணங்களை போட்டுவிட்டு சிறிது காலம் அதிருப்தியுடன் காத்திருந்தார்.

சில மாதங்களுக்குப் பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த குழாய்களை தலையில் சுமந்து வந்து தோட்டத்தின் ஒரு பகுதியில் போட்டார். அப்போது குழாய்க்குள் இருந்து ஒரு நல்ல பாம்பு வெளியே ஓடியது. சற்று தூரம் ஓடிய அப்பாம்பு மீண்டும் திரும்பி வந்து ஒரு இடத்தில் தொடர்ந்து சில நிமிடங்கள் வட்டமிட்டு விளையாடி விட்டு மீண்டும் ஓடி விட்டது.

இத்தகவலை அறிந்த அந்த ஊர்ப்பெரியவர், விவசாயிடம் அந்த இடத்தில் தோண்டு, உனக்கு ஏதாவது நிச்சயம் கிடைக்கும் என்றார். அவரது ஆலோசனைப்படி தோன்றியதில் அங்கே கிணறு உருவானது. இச்சம்பவம் சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் நடந்திருந்தாலும், இன்று வரை அந்தக் கிணற்றில் தண்ணீர் வற்றவேயில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
இதுபோன்ற மிகவும் நுட்பமான உணர்வுகள் பாம்புக்கு உண்டு.

ஆனால் அதேவேளையில், நாற்று நடச் செல்லும் போது, விதைக்கச் செல்லும் போதும் பாம்பு குறுக்கே சென்றால், சரியான மகசூலை எதிர்பார்க்க முடியாது. மழை அதிகமாகப் பெய்வது, வெள்ளதால் பாதிப்பது போன்ற விஷயங்களால் மகசூல் பாதிக்கப்படும். எனவே முக்கியமான சுப காரியங்களுக்குச் செல்லும் போது பாம்பு குறுக்கே சென்றால் பலன்களை எதிர்பார்க்க முடியாது. அக்காரியத்தை தள்ளிப்போடுவதே சிறப்பான முடிவாக இருக்கும். சாரைப் பாம்புக்கும் இது பொருந்தும்.

எனது நண்பர் (திராவிடர் கழகத்தில் ஈடுபாடு உள்ளவர்) ஒருவருக்கு 30 வயது வரை திருமணம் நடக்காமல் இருந்தது. அவரது பெற்றோர் ராசி, பொருத்தம் உடைய ஜாதகம் கிடைக்காமல் தவித்தனர். ஆனால் இதில் எல்லாம் ஈடுபாடு இல்லாத எனது நண்பர் தனக்கு தெரிந்தவர்கள் கூறிய பெண்ணை பார்ப்பதற்காக பெற்றோரை அழைத்துச் சென்றார். அப்பெண்ணின் வீட்டை இவர்கள் நெருங்கிய போது நாகப் பாம்பு அவர்களின் குறுக்கே சென்று புதருக்குள் மறைந்தது.

இதனைக் கண்ட நண்பரின் பெற்றோர் அப்பெண் வேண்டாம்... வீட்டிற்கு சென்று விடலாம் என வலியுறுத்தினர். ஆனால் எனது நண்பர் எதையும் பொருட்படுத்தாமல் அப்பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால் திருமணம் நடந்த 10 நாட்களுக்கு உள்ளாகவே அப்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதற்கான காரணமும் சொற்பமானதுதான். தம்பதிகளுக்குள் இடையே ஏற்பட்ட சிறு மனக்கசப்பு மனைவியை மரணத்திற்கு இழுத்துச் சென்றுவிட்டது.

எனவே, வயல்வெளிகளுக்குள் பாம்பு வந்து செல்வது என்பது அதிர்ஷ்டமான விடயம்தான். ஆனால் விதை விதைக்க, அல்லது நாற்று நடச் செல்லும் போது நம்மை குறுக்கிடும் வகையில் பாம்பு செல்லக் கூடாது. அது நல்ல பலன்களைத் தராது. கெடுதல் வருவதை முன்பாகவே உணர்த்துவதாக கருதுவது நல்லது.

இதேபோல் கோழி, முட்டை ஆகியவற்றை பாம்பு கொண்டு சென்றால், கிராமத்தில் உள்ளவர்கள் நாகக் கன்னி தனக்காக எடுத்துக் கொண்டதாகவே கருதுவர். ஒரு சில கிராமங்களில் பாம்புகளுக்காகவே சில கோழிகளை நேர்ந்துவிடும் வழக்கமும் உள்ளது.