நாவல் மர‌த்‌தி‌ன் சிறப்பு!

திங்கள், 23 மே 2011 (19:04 IST)
ஜோ‌திர‌த்னமுனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: நாவல் மரம் எல்லா வகையிலும் ஒரு சிறப்பான மரம். நாவல் மரம் என்று எடுத்துக்கொண்டால், திருநாவலூர் என்று ஒரு ஊர் இருக்கிறது, திருச்சி பக்கத்தில் திருவானைக்காவல் என்று ஒரு ஊர் இருக்கிறது. இங்கெல்லாம் நாவல்தான் தலவிருட்சமாக இருக்கிறது.

நாவல் மரத்திற்கென்று பெரிய மருத்துவ குணங்கள் உண்டு. நாவல் பட்டை சாறு எல்லா வகையிலும் நல்லதைக் கொடுக்கும். நாவல் இலையை பொடி செய்து சாப்பிட்டால் பேதி நிற்கும். இந்தப் பொடியால் பல் தேய்த்தால் பல் ஈறுகள் வலுவடையும். நாவல் இலையின் சாம்பல் நாள்பட்ட தீக்காயங்கள், வெட்டுக் காயங்களை குணப்படுத்தும்.

நாவல் பழம் நீரிழவு நோய் எனப்படும் சர்க்கரை வியாதியை எல்லா வகையிலும் தீர்க்கக் கூடியது. விநாயகருக்கும் நாவல் பழம் மிகவும் விசேஷமானதாக இருக்கிறது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி அன்று நாவல் பழம் வைத்து, வழிபட்டால் நல்லது என்று சொல்வார்கள்.

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் உடம்பிற்கு குளிர்ச்சி தரும். மேலும் சிறுநீரகப் பாதையில் உள்ள தொற்றுகளை விரட்டும், நீர்க்கடுப்பு பிரச்சனையையும் தீர்க்கும். சிறுநீரகத் தொற்றையும் போக்கும், சிறுநீர்க் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் போன்றவற்றையும் போக்கும் தன்மை நாவல் பழத்திற்கு இருக்கிறது. இதுதவிர, நாவல் பழத்தில் புரோட்டின், நார்சத்து, விட்டமின் சி, டி போன்றவையும் இருக்கிறது. தற்போது பல ஊர்களில் நாவல் மரம் இல்லை. மக்களுக்குத் தெரியாத இடங்களில் மட்டும் இருக்கிறது.

பொதுவாக நாவல் மரங்களை வளர்த்தால் நல்லது. ஆனா‌ல் வீட்டில் வளர்ப்பது அவ்வளவு விசேஷம் கிடையாது. நிலங்களில் வைத்து வளர்க்கலாம். நாவல் மரங்களைத் தேடி கரு வண்டுகள் அதிகமாக வரும். கரு நாகங்களும் நாவல் மரத்தில் வந்து குடி கொள்ளும். அந்த மரத்திலிருந்து வெளிப்படக்கூடிய வைப்ரேஷன், அதனுடைய காற்‌றி‌ன் கு‌ளி‌ர்‌ச்‌சி போன்றவை இவைகளை ஈர்க்கும். அதனால் இதனை வீடுகளில் வளர்க்காமல், விளை நிலங்கள், தோட்டம் போன்ற இடங்களில் வளர்த்தால் நல்லது. அந்தக் காற்று உடலிற்கும் நல்லது, மகிழ்ச்சியும் தரக்கூடியது.

வெப்துனியாவைப் படிக்கவும்