தமிழ்.வெப்துனியா.காம்: ஒருவருடைய கை விரல்கள், கால் விரல்களைப் பார்த்தே ஒட்டுமொத்த உருவத்தையும், உயரத்தையும் தீட்டிவிட முடியும் என்று சொல்கிறார்கள். முன்பு கூட, ஒரு அரச குமாரியிடம் தூரிகை எடுத்துக் கொடுக்கச் சொல்லி கேட்டு வாங்கி, அந்த கை விரல்கள், நகங்களை வைத்து அவருடைய முழு உருவத்தையும் தீட்டியதாகவும் சொல்வார்கள். இப்படி ஒரு கை விரல்களை வைத்தே ஒருவருடைய உருவத்தை அறியலாம் என்பது உண்மையா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: கை விரல்கள் தேவையில்லை. ஒரு பெண்ணினுடைய ஒரு தலை முடியை வைத்தே அந்தப் பெண்ணினுடைய நெற்றி முதற்கொண்டு, மார்பகங்கள் என்று, அறிவுக்கூர்மை வரை அறியக்கூடிய ஞானிகளெல்லாம் இருந்தார்கள். அதனால்தான், சில நேரங்களில் பில்லி சூனியம், மாந்திரிகம் செய்பவர்கள் முடி, நகம், காலடி மண் வைத்து சிலவற்றை செய்வதெல்லாம் பல இடங்களில் நடைமுறையில் இருக்கிறது.
சாமுத்திரிகா லட்சணப் பிரகாரம் முடியை வைத்தே அந்த அளவிற்கு உணரக்கூடிய ஞானிகளெல்லாம் இருந்தார்கள். அதில் பரிட்சயம் உள்ளவர்களெல்லாம் தற்போது படிப்படியாகக் குறைந்துவிட்டார்கள். புராதனக் கலைகளில் ஈடுபாடு இல்லாமல் போனதால் அந்த நிலைமை வந்தது. சோழர் காலத்தில் இந்த விஷயங்கள் பெரிய அளவில் இருந்திருக்கிறது. பெரிய அளவில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுப்பதென்றால், ரோமத்தை வைத்துதான் நிறைய தெரிந்துகொண்டிருக்கிறார்கள்.
இதற்கென்றே மகாராஷ்டிராவில் இருந்து குரு நாதர் ஒருவர், இதுபற்றி ஆய்வு செய்பவர் இருந்தார். சோழர்கள் பெண்களையும் உளவாளிகளாக பயன்படுத்தினார்கள். பெண்களையும் தூதுக்கு அனுப்பினார்கள். அதற்கு தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அவர்களுடைய அங்க அவையங்களை அறிந்துகொள்வதற்கு, ரோமக்கால்கள், ரோமத்தை வைத்தெல்லாம் ஆய்வு செய்துவிட்டு, இந்தப் பெண் உண்மையை சீக்கிரம் வெளியிடமாட்டாள், இரகசியங்களை சொல்லமாட்டாள். இவளால் அரசாங்கத்திற்கு எந்தக் கெடுதலும் இல்லை என்றெல்லாம் பார்த்து தேர்ந்தெடுப்பார்கள்.
ஒரு மூலிகை கலவை இருக்கும். அதில் அந்த ரோமத்தைப் போட்டால் எப்படி மாறுகிறது என்று பார்ப்பார்கள். கலவை நீர்த்துப் போனால் அவருடைய உடலும், மனக்கூறும் இப்படி இருக்கும். அபிலாசைகளுக்கு ஆசைப்பட்டு சீக்கிரமே அந்தரங்களை வெளியிட்டுவிடுவார்கள். ஆனால், அந்தக் கலவை திடநிலையை அடைந்தால், அவ்வளவு சீக்கிரத்தில் எந்தச் சூழ்நிலையிலும் இவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் இராஜாங்க இரகசியங்களை வெளியிடமாட்டார்கள் என்பன போன்று இராஜ இராஜ சோழன் காலத்தினுடைய சில குறிப்புகளே இருக்கிறது. இதையெல்லாம் வைத்துதான் அரசர்கள் அந்தக் காலத்தில் பல கோணங்களில் எதிரிகளை வீழ்த்தினார்கள். போர்க்களத்தில் நின்று மட்டும் அவர்கள் எதிரிகளை வீழ்த்தவில்லை. இதுபோன்றும் செய்திருக்கிறார்கள்.
பொதுவாக விரல் நகங்கள் கூர்மையாக இருக்க வேண்டும், அதாவது நகக்கண் சரிசமமாக அமைந்திருந்தால் நல்லது. ஆள்காட்டி விரலுக்கு அடுத்து இருக்கிற பெருவிரலும் மோதிர விரலும் சரிசமமாக இருக்கிறவர்கள் இளவரசியாகக்கூடிய தகுதியெல்லாம் பெற்றவர்களாக இருப்பார்கள். தவிர, பொதுவாக நகக்கண் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது அதிர்ஷ்டத்தோட வெளிப்பாடு என்று சொல்வார்கள். இதையே மருத்துவத்தில் ஆரோக்கியத்தின் வெளிப்பாடு என்று சித்த வைத்தியர்கள் சொல்வார்கள்.
இது இல்லாமல் பொதுவாக விரல்கள் மென்மையாக இருக்க வேண்டும். நீளமாக இருக்க வேண்டும். எந்த அளவிற்கு நீளமான விரல்களோடு இருக்கிறார்களோ அந்த அளவிற்கு பெண்கள் அறிவுக்கூர்மையோடு இருப்பார்கள். ஆண்களுக்கும் இதேபோலத்தான். பொதுவாக குட்டை விரல்கள் அந்த அளவிற்கு நல்லதல்ல என்று சொல்வார்கள். எந்த அளவிற்கு விரல்கள் நீண்டிருக்கிறதோ அந்த அளவிற்கு அறிவுக்கூர்மை, கற்புநெறி, ஒழுக்கநெறி எல்லாம் சிறந்து விளங்குவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.