ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.113.73 கோடி : வேட்புமனு தாக்கலின் விவரம்

செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (08:34 IST)
சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தனது சொத்து மதிப்புகளை குறிப்பிட்டுள்ளார்.


 

 
சென்னை ஆர்.கே நகரில் போட்டியிடும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதோடு, ஒரு பிராமணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தார். அதில் தன்னுடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.
 
தான் ஜெயா ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ், கோடநாடு எஸ்டேட், ராயல் ப்ளோரிடெக் எக்ஸ்போர்ட்ஸ், க்ரீன் டீ எஸ்டேட் போன்ற நிறுவனங்களில் பங்குதாரராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த நிறுவனங்களில் மார்ச்  31ஆம் தேதி வரை, ரூ.27 கோடியே 44 லட்சத்து 55 ஆயிரம் முதலீடு செய்திருப்பதாக கூறியுள்ளார்.
 
தன்னிடம் உள்ள வாகனங்களை பற்றி குறிப்பிட்டுள்ள அவர், 1980-ஆம் ஆண்டு முதல் அம்பாஸிடர் கார் இருப்பதாகவும், மகேந்திரா ஜீப், மகேந்திரா போலிரோ, டெம்போ டிராவலர், சுவராஜ் மஸ்தா மாக்ஸி, காண்டஸா, டெம்போ ட்ராக்ஸ், டயோடா ப்ராடோ (தற்போது பயன்படுத்தும் வாகனம்) ஆகிய 9 வாகனங்கள் இருப்பதாகவும் அவற்றின் சந்தை மதிப்பு ரூ.42.25 லட்சம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
மொத்தமாக, தன்னிடம் உள்ள அசையும் சொத்துக்கள், அதாவது நகை, முதலீடுகள், வாகனங்கள் ஆகியவற்றின் தற்போதைய மதிப்பு ரூ.41 கோடியே 63 லட்சத்து 55 ஆயிரத்து 395 என குறிப்பிட்டுள்ளார்.
 
தற்போது அவர் வசித்து வரும் போயஸ் தோட்ட வீடு, 1967 ஆம் ஆண்டு வாங்கப்பட்டது என்றும், ஹைதராபத் மற்றும் சென்னையில் சில இடங்களில் அவருக்கு இருக்கும் வீடுகள் என அவரிடம் உள்ள அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 72 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 190 எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
மொத்தமாக, அசையும், அசையாத சொத்துகளின் மதிப்பு ரூ.113 கோடியே 73 லட்சத்து 38,585 என அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும்,  2 ஆண்டுகள், அதற்கு மேல் தண்டனை விதிக்கக் கூடிய அளவிலான குற்றச்சாட்டுகள் ஏதும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் அவர் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பை விட ரூ.67 கோடி அதிகரித்துள்ளது. அதாவது, அவரின் சொத்து மதிப்பு 130 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்