பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தேமுதிகவின் 2 ஆம் கட்ட தேர்தல் அறிக்கை வெளியீடு

திங்கள், 21 மார்ச் 2016 (13:17 IST)
தேமுதிக வின் 2 ஆம் கட்ட தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கட்சி தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார்.


 

 
அந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்:–
 
அரசுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களின் பங்குகள் பங்கு சந்தையில் வெளியிடப்படும். அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பங்குகள் இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் சந்தை மதிப்பில் குறைந்தது ரூ.3 லட்சத்துக்கு குறையாமல் பங்கு கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் 25 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
 
டிசிஎஸ், விப்ரோ, மகேந்திரா, மைட் டீரி போன்ற உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களின் உதவியுடன் அரசின் அனைத்து துறைகளும் (விவசாயம் முதல் கல்வித்துறை வரை) கணினி மயமாக்கப்படும். இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
 
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப்புற கோவில் அர்ச்சகர்களுக்கும் மாத ஊதியம் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் 60 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள்.
 
ஆண்டுக்கு 250 நூல்கள் வரை தேசிய மயமாக்கப்பட்டு அதன் ஆசிரியர்களுக்கு சன்மானம் வழங்கப்படும். 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் அனைத்து இலக்கிய இயக்கங்கள், அமைப்பு, மன்றம், கழகங்கள் என நடத்தி வருபவர்களின் தேவை அடிப்படையில் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம்வரை மானியம் ஒரு முறை வழங்கப்படும்.
 
தமிழர் திருநாள் பொங்கல்விழா ஒரு வாரம் கொண்டாடப்படும். பள்ளி, கல்லூரி, அரசு நிறுவனங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கப்படும்.
 
ஆற்றில் மணல் அள்ளப்படுவது நிறுத்தப்படும். மணல் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் வழங்கப்படும்.
 
ஒவ்வொரு நிறுவனமும் தனது பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு நிறுவனத்தில் ஒரே ஒரு ஊழியர் பணிபுரிந்தாலும் சேமநல நிதி (பிஎப்) கணக்கு தொடங்க வேண்டும். ரூ.20 ஆயிரம் வரை ஊதியம் பெறும் அனைவருக்கும் திட்டம் வகுக்கப்படும். இந்த திட்டம் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள்.
 
தனியாருடன் இணைந்து கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்.
 
வெளிமாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கு, தமிழகத்தில் வாழும் வெளிமாநிலத்தினர், வெளிநாட்டவர்களுக்கு, வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு, வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற தமிழர்களுக்கு என தனித்தனியாக 4 நலவாரியங்கள் அமைக்கப்படும். இந்த நலவாரியம் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் செயல்படும்.
 
தமிழகத்தில் உள்ள 12 லட்சம் மாற்றுத்திறனாளிகளில் வாகனம் தேவைப்படும், பார்வை உள்ள மாற்றுத்திறனாளிகள் 3 லட்சம் பேருக்கு மானிய விலையில், இரண்டு அல்லது 3 சக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
 
வங்கிகளில் கல்விக்கடன் உதவி பெற்று படித்த, வேலையில்லாத பட்டதாரி அனைவருக்கும் 4 மாதங்களில் வேலை கொடுக்கப்படும்.
 
அரசு ஊழியர் யாராவது லஞ்சம் கேட்டால், மாவட்ட ஊழல் ஒழிப்பு கண்காணிப்பாளர்களுக்கு புகார் கடிதம் அனுப்பி அதன் நகலை அரசின் இ–மெயில் முகவரிக்கு அனுப்பவும். பிறகு நடப்பதை பார்க்கவும்.
 
அரசு ஊழியர் அனைவருக்கும் ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும். ஓய்வு பெறும் வயதை 58 ல் இருந்து 60 ஆக உயர்த்த பரிசீலனை செய்யப்படும். அரசு ஊழியர்கள் கடுமையான குற்றத்தை தவிர ஓய்வு பெறும் கடைசி 2 ஆண்டுகளில் யாரும் பணியிடை நீக்கம் செய்யமாட்டார்கள். அப்படியே செய்தாலும் 2 மாதத்துக்குள் முடிவு அறிவிக்க வேண்டும்.
 
தமிழகத்தில் உள்ள கருவேல மரங்கள் முற்றிலும் 4 மாதத்துக்குள் அகற்றப்படும். இவை தேமுதிகவின் 2 ஆம் கட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்