ரூ.15 கோடி பேரம் பேசியும் கட்சி தாவாத ஏழை தேமுதிக எம்.எல்.ஏ

வெள்ளி, 15 ஏப்ரல் 2016 (17:25 IST)
பெரிய கட்சிகள் பல கோடிகள் பேரம் பேசியும், வேறு கட்சிக்கு தாவத சென்னை எழும்பூர் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ நல்லதம்பி  பற்றிய செய்திகள் வெளியாகியிருக்கிறது.
 
கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை எழும்பூர்  தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் நல்லதம்பி. இவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். விஜயகாந்தின் தீவிர ரசிகர். பிரிக்ளின் ரோட்டில் ரோட்டோர சைக்கிள் கடை நடத்தி வருகிறார்.
 
இந்த முறையும் அவருக்கு சீட் வழங்கப்பட்டது. ஆனால் தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லை என்று கூறி, தேமுதிக தலைமையிடம் சீட் வேண்டாமென்று மறுத்திருக்கிறார் நல்லதம்பி.
 
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவர், பட்டா இல்லாத, அரசாங்கம் கொடுத்த கல்நார் ஒட்டு வீட்டில் வசித்து வந்த அவர், தற்போதுதான் குத்தகைக்கு ஒரு வீடு எடுத்து வசித்து வருகிறார். சைக்கிள் கடை வைத்திருந்த அவரை, எம்.எல்.ஏ வாக மாற்றி சட்டசபையில் அமர வைத்து அழகு பார்த்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
 
அரசாங்கம் கொடுக்கும் ரூ.55 ஆயிரம் சம்பளத்தில், பி.ஏ சம்பளம், அலுவலக நிர்வாக செலவுகள், போக்குவரத்து ஆகிவற்றை சமாளித்து குடும்பம் நடத்துகிறார். சேமிப்பு என்று எதுவும் இல்லை.
 
ஆறு மாதம் சஸ்பெண்டில் இருந்த போது விஜயகாந்த் அவருக்கு ரூ. 10 ஆயிரம் குடும்ப செலவுக்கு கொடுத்துள்ளார். இவர் மீது எந்த லஞ்ச புகாரும் இல்லை.பொதுமக்கள் யாரிடமும், எதற்காகவும் பணம் பெற்றதில்லை. சைக்கிள் கடையையே தனது அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார்.
 
அவரை எப்படியாவது தங்கள் கட்சிக்கு இழுக்க தமிழகத்தின் பெரிய கட்சிகள் ரூ.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை பேரம் பேசி வலை வீசியிருக்கிறது. ஆனால், விஜயகாந்தையே தனது தலைவனாக நினைக்கும் நல்லதம்பி அந்த கட்சிகளுக்கு விலை போகவில்லை என்று கூறப்படுகிறது.
 
இந்த முறையும் எழும்பூர் தொகுதியில் விஜயகாந்த், அவரை போட்டியிட  கூறியும், தேர்தல் செலவுக்கு பணம் இல்லை என்று கூறி தனக்கு சீட் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். அதோடு, தனக்கு வேறு ஏதேனும் கட்சிப் பணியை கொடுங்கள் என்று கேட்க, தற்போது, பிரேமலதாவுடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் வேலை அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
 
கோடிகளுக்கு விலை போய்கொண்டிருக்கும் எம்.எல்.ஏக்கள் மத்தியில்,  எப்படியாவது, யாரையாவது பிடித்து கட்சியில் சீட் வாங்கி, வெற்றி பெற்று, வீடு, கார், கோடிகள் என்று செட்டிலாக நினைக்கும் எம்.எல்.ஏக்கள் மத்தியில், பணம் இல்லை எனக்கு சீட் வேண்டாம் என்று கூறும் இவர் உண்மையில் நல்ல தம்பிதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்