மனித வாழ்வில் முன்னேற்றம் என்பது படைப்பில் இறைவனது செல்வாக்கு இருப்பதற்கு அடையாளமாகும்.
முன்னேற்றம்: இதற்காகவே நாம் இப்புவிக்கு வந்துள்ளோம்.
முன்னேற்றமே புவி வாழ்வின் நோக்கம். உனது முன்னேற்றம் நின்றுவிட்டால் நீ இறந்துவிடுவாய். முன்னேறாத ஒவ்வொரு கணமும் நீ புதைகுழியை நோக்கி ஓர் அடி எடுத்து வைக்கிறாய்.
இருக்கும் நிலையில் திருப்தியடைந்து ஆர்வமுறுவதை நிறுத்திய கணத்திலேயே நீ சாகத் தொடங்கிவிடுகிறாய். இயக்கமே வாழ்வு, முயற்சியே வாழ்வு, முன்னோக்கிச் செல்லுதல், வருங்கால வெளிப்படுத்துதல்களையும் சித்திகளையும் நோக்கி மேலேறுதல், அதுவே வாழ்வு. ஓய்வெடுக்க நினைப்பதைப்போல் ஆபத்தானது வேறொன்றுமில்லை.
ஒவ்வொரு நிமிடமும் ஏதோவொன்றைக் கற்கவும் ஒரு முன்னேற்றம் அடையவும் வேண்டியதிருக்கும், ஒவ்வொரு தருணத்திலும் ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கும் முன்னேறுவதற்கும் வாய்ப்பிருக்கும்.
முன்னேற்றம்: யோக பாதையில் முன்னேறுவதற்காக ஒவ்வொரு நிமிடமும் தன்னையும் தன் உடைமைகள் எல்லாவற்றையும் கொடுத்துவிடத் தயாராக இருத்தல். முன்னேற்றத்திற்கு முடிவே இல்லை. ஒவ்வொரு நாளும் நாம் செய்வதை மேலும் நன்றாகச் செய்யக் கற்றுக்கொள்ள முடியும்.
நீ எப்படி இருந்துள்ளாய் என்பதைப் பற்றி எண்ணாதே, நீ எப்படி இருக்கு விரும்புகிறாய் என்பதையே எண்ணு, நீ நிச்சயமாக முன்னேறுவாய்.
பின்னோக்கிப் பார்க்காதே, எப்போதும் முன்னோக்கியே நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ அதையே பார் - நீ முன்னேறுவது உறுதி.
நமது இதயத்தில் முன்னேற்றத் தீ எரிந்துகொண்டிருக்கச் செய்வோமாக. இன்று செய்ய முடியாததை இன்னொரு நாள் செய்வோம். முன்னேற்றத்திற்காகச் செய்யப்படும் முயற்சி ஒருபோதும் வீண்போவதில்லை.
முதலில் நாம் முன்னேறுவோம், பிறரை முன்னேறச் செய்ய அதுவே மிகச் சிறந்த வழி (இது ஆன்மீக பாதைக்குச் சொல்லியுள்ளார் என்பதைக் கருத்தில் நிறுத்துக).
எப்போதும் முன்னேறிக்கொண்டேயிருக்க விரும்புவோருக்கு மூன்று முக்கிய முன்னேற்ற வழிகள் உள்ளன.
1. தனது உணர்வு (consciousness) எல்லையை விரிவுபடுத்துதல்.
2. தனக்கு தெரிந்துள்ளதை இன்னும் நன்றாகவும் இன்னும் முழுமையாகவும் தெரிந்துகொள்ளுதல்.
3. இறைவனைக் கண்டுபிடித்து அவனுடைய சித்தத்திற்கு மேலும் மேலும் சரணடைதல்.
2. இந்தக் கருவியின் (உடலை) வேலை செய்யும் முறையை இடைவிடாது பூரணப்படுத்துதல்.
3. இந்தக் கருவியை மேலும் மேலும் அதிக ஏற்புத்திறன் உடையதாகவும் இறைவனுக்குக் கீழ்ப்படிவதாகவும் செய்தல்.
மேலும் மேலும் அதிகமானவற்றை புரிந்துகொள்ளவும், செய்யவும், கற்றுக்கொள்ளுதல். இறைவனுக்கு முழுமையாகச் சரணாகதி செய்திட முடியாதபடி தடுக்கிற எல்லாவற்றையும் தன்னிடமிருந்து நீக்கிவிடுதல், தன்னுடைய உணர்வை மேலும் மேலும் அதிகமாக இறைவனுடைய செல்வாக்கை எளிதில் ஏற்கும் தன்மையுடையதாகச் செய்தல்.
இப்படியும் சொல்லலாம்: தன்னை மேலும் மேலும் விரிவாக்குதல், தன்னை மேலும் மேலும் முழுமையாக (இறைவனுக்கு மட்டுமே) சரணாகதி செய்தல்.
நன்றி: வைகறை ஸ்ரீ அரவிந்த ஆசிரம காலாண்டு வெளியீடு.