தமிழர் பாரம்பரியத்திலும், வரலாற்றிலும், இலக்கியத்திலும் போற்றப்படும் பொதிகை மலையைத் தழுவி ஓடிவரும் குற்றால அருவி நீர், அதன் வழியிலுள்ள பல மூலிகைச் செடிகளைத் தழுவி ஓடி வருவதால்தான் அதற்கு இந்த தனித்த மகிமை இருப்பதாகக் கூறுகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எவராயினும் குற்றால அருவிகளில் குளித்து குறை கூறியவர் எவருமில்லை! மழை பொய்த்துப் போகும் காலங்களில் போதுமான அளவிற்கு அருவியில் நீர் கொட்டவில்லையே என்று ஒரு குறைபாடல் தவிர, குற்றால அருவிகளை கொஞ்சாதவர்களை காண்பதரிது.
அப்படியென்ன குற்றால அருவிகளுக்கு சிறப்பு என்று இதற்கு மேலும் கேட்பவர்கள், ஒரு முறை குற்றாலத்திற்குச் சென்று அங்குள்ள அருவிகளில் குளித்து நீராடிவிட்டு, அன்றோ அல்லது மறுநாளோ செங்கோட்டைக்கு அப்பால் தமிழ்நாடு எல்லையைத் தாண்டிசென்று கேரளத்திலுள்ள பாலாறு அருவியில் குளித்துவிட்டு வாருங்கள், அந்த வேறுபாடு தெரியும்.