தனுசு - கார்த்திகை மாத ராசி பலன்கள்

சனி, 15 நவம்பர் 2014 (14:26 IST)
அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் வாதாடுபவர்களே! உங்களுடைய ராசிக்கு லாப வீட்டிலேயே சனிபகவான் நிற்பதால் தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்து ஏமாந்துப் போன தொகை கைக்கு வரும். அவசரத்திற்கு அக்கம்&பக்கத்தில் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். கணவன்&மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் இருந்து வந்த பிடிவாத குணம் மாறும். வெளிமாநிலத்தில், அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

பழைய சொந்த&பந்தங்கள் தேடி வந்துப் பேசுவார்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் 22&ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 2&ல் அமர்ந்து உச்சமடைவதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் நீங்கும். வீடு, மனை புதிதாக வாங்குவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். வெளிவட்டாரத்தில் நீங்கள் பெருமையாகப் பேசப்படுவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசத்தையெல்லாம் முன்னின்று நடத்திக் கொடுப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலைக் கிடைக்கும். குலதெய்வக் கோவிலைப் புதுப்பிப்பீர்கள்.

உங்களுடைய பாக்யாதிபதியான சூரியன் 12&ல் மறைந்திருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத படி செலவினங்கள் அதிகரிக்கும். தந்தையாருக்கு சிறுசிறு உடல் நலக் குறைவு ஏற்படக்கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உங்கள் ராசிநாதன் குருபகவான் 8&ல் மறைந்துக் கிடப்பதால் அலைச்சல் இருக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும் இருக்கும். பிரபலங்களுடன் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வரக்கூடும். எனவே வெளிவட்டாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். சிலருக்கு வேலைக் கிடைக்கும். காதல் கசந்து இனிக்கும்.

வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். பங்குதாரர்களும் புதிதாக வருவார்கள். வேலையாட்களால் இருந்த பிரச்னைகள் தீரும். வேலையாட்கள் உங்களுடைய கொடுத்து உதவும் மனப்பான்மையைப் புரிந்துக் கொண்டு உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கடையையும் விரிவுப்படுத்துவீர்கள். வெளிமாநிலங்கள், அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தின் பொருட்களை விற்பதன் மூலம் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் ஒருபக்கம் வேலைச்சுமை இருந்தாலும் மறுபக்கம் உங்களுக்கு செல்வாக்குக் கூடும். சக ஊழியர்களுடன் இருந்த வந்த பனிப்போர் நீங்கும். மூத்த அதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அலுவலகத்தில் எல்லோரும் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்கள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார்கள். பணப்பற்றாக்குறை இருந்தாலும் கடின உழைப்பால் சொன்ன சொல்லை காப்பாற்றும் மாதமிது.   

வெப்துனியாவைப் படிக்கவும்