தம்பி ராமையாவின் மகன் ஹீரோவானது எப்படி? சொல்கிறார் இயக்குனர்

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (20:43 IST)
தம்பி ராமையாவின் மகன் உமாபதி, 'அதாகப்பட்டது மகாஜனங்களே' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருவது பற்றி பல வாரங்கள் முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம்.
 

 
சின்னத்திரை தொடர்கள், ரியாலிட்டி ஷோக்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய இன்பசேகர் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். உமாபதி எப்படி நாயகனானார்? இன்பசேகரே சொல்கிறார்.
 
"இது எனக்கு முதல் படம். மக்கள் தியேட்டர்களுக்கு சென்று ஜாலியாக ஒரு படம் பார்க்கும் வகையில் ஒரு படத்தை எடுக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதன்படி, இப்படத்தை நகைச்சுவையோடு எடுத்துள்ளோம். 
 
இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க புதுமுகம் தேவைப்பட்டது. அப்போது நடத்திய நேர்முக தேர்வில்தான் உமாபதியை தேர்ந்தெடுத்தோம். அப்போது எங்களுக்கு அவர் தம்பி ராமையாவின் மகன் என்று தெரியாது. அவரை தேர்வு செய்தபிறகுதான் உமாபதி, தம்பி ராமையாவின் மகன் என்று தெரியும். பின்னர், உமாபதி தனது அப்பாவிடம் சென்று இந்த கதையை பற்றி கூறினார். அவருக்கும் பிடித்துப்போனது" என்றார்.     
 
தம்பி ராமையாவின் மகன் என்று தெரியாமலே உமாபதியை நாயகனாக்கியிருக்கிறார். நல்லவேளை தம்பி ராமையாவை இன்பசேகர் தெரிந்திருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்