நடிகர் சங்கத்தைக் காப்பாற்றுவேன் என்று கூறி நடிகர் சங்கத்தின் பொருளாளராக ஆனார் விஷால். ஓரிரு போராட்டங்கள் தவிர்த்து இதுவரை அவர் எதுவுமே செய்யவில்லை. குறிப்பாக, ‘சுச்சி லீக்ஸ்’ விஷயத்தில் நடிகர் - நடிகைகளின் பெயர் நாறியபோது கூட, நடிகர் சங்கம் சார்பில் ஒரு புகார் கூட அளிக்கவில்லை. அவ்வளவு ஏன், அதைப்பற்றி ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. ஆனால், தன்னுடைய தாயார் பெயரில் உள்ள அறக்கட்டளை மூலமாக ‘விஷால் அதைச் செய்தார், இதைச் செய்தார்’ என அவருடைய பி.ஆர்.ஓ. மூலம் செய்தி அனுப்பி தனிமனித பப்ளிசிட்டி தேடிக் கொண்டார்.
இந்த நிலையில், அடுத்ததாக தயாரிப்பாளர் சங்கத்தையும் காப்பாற்றுவேன் என்று கூறி களமிறங்கியிருக்கிறார். நடைபெறப் போகும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால், வழக்கம்போல் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். அத்துடன், எந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தாலும், அழைப்பு இல்லாமலேயே வாலண்டியராகக் கலந்து கொள்கிறார். இன்னும் இரண்டு வருடங்களுக்கு இப்படித்தான் எல்லா பட விழாக்களிலும் கலந்து கொள்வேன் என்று அவரே விளக்கமும் கொடுக்கிறார்.
பொதுவாக, அரசியல்வாதிகள் தான் தேர்தல் நேரத்தில் தொகுதிப் பக்கம் சென்று நல்லது செய்வது போல் நடிப்பார்கள். தேர்தல் முடிந்ததும் அந்தப் பக்கமே வரமாட்டார்கள். ஜெயித்தவர்களும் சரி, தோற்றவர்களும் சரி… இந்த விஷயத்தில் இருவருமே இப்படித்தான் நடந்து கொள்வர். அதேபோலத்தான் விஷாலும் நடந்து கொள்கிறார். தன்னுடைய படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலேயே கலந்து கொள்ளாமல் டேக்கா கொடுக்கும் சினிமா நடிகர்களுக்கு மத்தியில், இதுவரை எத்தனையோ விழாக்களுக்கு அழைத்தும் வராத விஷால்,அழைக்காமலேயே வருவது எல்லாமே ஓட்டுக்காகத்தான். அரசியல்வாதிகளையே இவர் மிஞ்சிவிட்டார் என்கின்றனர் கோடம்பாக்கத்தில் இருப்பவர்கள்.