டெனட் படமே எனக்குப் புரியல… மாநாடு இயக்குனர் வெங்கட் பிரபு பதில்!

வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (13:35 IST)
மாநாடு படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் அது டெனட் படத்தின் டிரைலர் போலவே இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்த படம் தற்போது முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. முன்னதாக இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் டீசர் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் டீசரை இயக்குனர் அனுராக் காஷ்யப் வெளியிட்டார். சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படமான டெனட்டை போல காட்சிகள் ரிவர்ஸில் செல்லும் வகையில் காட்சிகள் எடிட் செய்யப்பட்டு இருந்தன. இந்நிலையில் இந்த படத்தையும் டெனட்டையும் ஒப்பிட்டு நிறைய கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன.

இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக இயக்குனர் வெங்கட்பிரபு ‘பலரும் டெனட் படத்தோடு என் படத்தை ஒப்பிடுவது எனக்கு சந்தோஷம். ஆனால் அந்த படத்தோடு மாநாடு படத்துக்கு எந்த சம்மந்தமும் இல்லை. உண்மையை சொல்லவேண்டும் என்றால் எனக்கு டெனட் படம் புரியவே இல்லை. எங்கள் டிரைலர் வந்தால் இன்னும் வேறு சில படங்களோடு ஒப்பிடப்படலாம்.’ எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்