நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'கர்ணன்', 'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'கப்பலோட்டிய தமிழன்' போன்ற படங்கள் ஏற்கனவே டிஜிட்டலில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்த சூப்பர் ஹிட் படமான 'வசந்த மாளிகை' திரைப்படமும் டிஜிட்டலில் உருவாகியுள்ளது
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பாடகி பி.சுசீலா, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய சிதரா லட்சுமணன், 'இந்த படத்தின் படப்பிடிப்பின்போது பல நாட்கள் நான் பணிபுரிந்துள்ளேன். டெய்லர், கோட் சூட்டை எல்லோருக்கும் தச்சுத் தருவான்; ஆனா, அதைப் போட்டுக்கிட்டு சிவாஜி நடந்துவரும்போதுதான் ராயலா இருக்கும். நடிப்புப் பயிற்சி எடுக்கும் இளைஞர்கள் 10 சிவாஜி படங்களைப் பார்த்தால் போதும் என்று கூறினார்.
மேலும் 'கெளரவம்' என்ற படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி மிக அற்புதமாக நடித்திருப்பார். அவருடைய நடிப்பை செட்டில் இருந்த அனைவரும் பாராட்டினர். ஆனால் நாகேஷ் மட்டும் 'இந்தப் படத்துல பல இடங்கள்ல நீங்க இங்கிலீஷ் பேசி பிச்சு உதறியிருக்கீங்க. ஆனா, இன்னைக்குப் பேசுனது சரியில்லை'' என்று தைரியமாக கூறியுள்ளார். அதற்கு சிவாஜி, 'நான் என்ன பத்மா சேஷாத்ரி ஸ்கூல்ல படிச்சுட்டா வந்து நடிக்கிறேன், பேசுன இங்கிலீஷ் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லு, சரியா இருக்கா இல்லையானு சொல்லாதே!'னு என்று நக்கலுடன் கூறினாராம். நாகேஷிடம் அவர் அப்படி சொன்னாலும் உடனே கேமிராமேனிடம் சென்று அந்த காட்சியை திரும்ப ஒரு தடவை எடுத்திரலாமா? என்று சொன்னாராம். அதுதான் சிவாஜி என்று சித்ரா லட்சுமணன் கூறினார்