உரையரங்கம் வாழ்த்தரங்கம்... களைகட்டவிருக்கும் வைரமுத்துவின் மணிவிழா

செவ்வாய், 8 ஜூலை 2014 (15:05 IST)
20ஆம் நூற்றாண்டின் வெற்றிகரமான கவிஞர் என்றால் அது வைரமுத்து மட்டுமே. படைப்பு சார்ந்து மட்டுமின்றி புகழ், பொருளாதாரம் என இரு தளங்களிலும் தன்னை வெற்றிகரமாக நிறுவிக் கொண்டவர்.
 
வைரமுத்துவின் பிறந்த தினமான ஜூலை 13-ஐ கவிஞர்கள் தினமாக வைரமுத்தே அறிவித்து தமிழில் கவிதை எழுதும் கவிஞர்களுக்கு பரிசும் பாராட்டும் அளித்து வருகிறார். இந்த சடங்கு ஒவ்வொரு வருடமும் ஜூலை 13ஆம் தேதி நடக்கும். இந்தமுறை வைரமுத்துவின் மணிவிழாவையும் சேர்த்து கொண்டாடுகின்றனர்.
 
ஜூலை 13 வெற்றித் தமிழர் பேரவை சார்பில் கவிஞர்கள் திருநாள் கலை இலக்கியத் திருவிழா கோவை கொடீசியா வளாகத்தில் நடக்கிறது. இதில் வைரமுத்துவின் மணிவிழாவும், பத்மபூஷண் விருது கிடைத்ததற்கான பாராட்டு விழாவும் நடக்க உள்ளது.
 
கலையையும், பொருளாதாரத்தையும் இணைக்கும் விதமாக கலை இலக்கிய கருத்தரங்கிற்கு சக்தி நிறுவனங்களின் தலைவர் நா.மகாலிங்கம் தலைமை தாங்குகிறார். முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டிருப்பவர் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம். இவர்கள் தவிர சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விமலா, மலேசிய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை மத்திய அமைச்சர் டத்தோ சரவணன் ஆகியோரும் விழாவில் பங்கெடுக்கிறார்கள்.
 
இந்த நிகழ்வைத் தொடர்ந்து உலகத் தமிழர் வாழ்த்தரங்கம், வைரமுத்துவின் படைப்புகள் குறித்த உரையரங்கம், நான்கு தலைமுறை இயக்குனர்களின் வாழ்த்தரங்கம் ஆகியன நடைபெற உள்ளது. அதில் பங்கு பெறப் போகிறவர்களை வைரமுத்துவே தேர்வு செய்துள்ளார்.
 
ஒருநாள் முன்னதாக ஜூலை 12ஆம் தேதி நடைபயணம், வைரவனம் உருவாக்குவதற்கான தொடக்கமாக மரக்கன்றுகள் நடும் சடங்கு, பள்ளி கல்லூரிகளுக்கு வைரமுத்துவின் புத்தகங்களை இலவசமாக வழங்குதல், வைரமுத்துவின் புத்தகங்கள் குறித்து மாணவர்களுக்கிடையே போட்டி நடத்தி பரிசுகள் தருதல் என வைரமுத்துவின் புகழ்பரப்பும் சடங்குகள் நடைபெறுகின்றன. இந்த அனைத்து நிகழ்வுகளையும் கவிப்பேரரசு வைரமுத்துவே முன்னின்று நடத்துகிறார். ரத்ததான முகாமும் நடைபெற உள்ளது.
 
மணிவிழா காணும் கவிப்பேரரசருக்கு நம்முடைய வாழ்த்துகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்