மழைக்காகத்தான் மேகம் அட கலைக்காகத்தான் நீயும்: கே.பாலச்சந்தர் நினைவு தினம் இன்று
ஞாயிறு, 23 டிசம்பர் 2018 (14:57 IST)
எம்ஜிஆர், சிவாஜி என ஹீரோக்களின் படங்கள் ஜெயித்த காலத்தில், இயக்குனரின் படங்கள் என்ற இலக்கணத்தை உருவாக்கியவர்களின் முக்கியமானவர் இயக்குனர் கே.பாலசந்தர். அவரது நினைவு தினம் இன்று.
பாலசந்தர் இயக்கிய முதல் படம் நீர்குமிழி. காமெடி நடிராக இருந்த நாகேஷ் மற்றும் மேஜர் சுந்தர் ராஜனை வைத்து இப்படத்தை இயக்கி இருப்பார். பாமா விஜயம், காவியத்தலைவி, புன்னகை, வெள்ளிவிழா, நான் அவனில்லை, பூவாதலையா, நூற்றுக்கு நூறு என 70களில் படத்தை எடுத்தார்.
இந்த படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வாரு கோணத்தில் நிஜவாழ்வியல் சம்பவங்களை தாக்கி இருக்கும். 80 களில் பாலசந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, மரோசரித்ரா, தண்ணீர் தண்ணீர், சிந்துபைரவி, ருத்ர வீணா, மனதில் உறுதி வேண்டும், புதுப்புது அர்த்தங்கள் என பல படங்கள் பெண்களை மையப்படுத்தி இருந்தது.
பெண்கள் வெறும், போகப்பொருளல்ல, அவர்கள் இந்த நாட்டின் கண்கள் என்று இப்போது சொல்வதை, கே.பாலசந்தர் தனது திரையில் பல படங்களில் காட்டியுள்ளார். ரஜினி, கமல், பிரகாஷ்ராஜ், விவேக், ஏ.ஆர்.ரகுமான் என பல திறமைசாலிகளை திரையுலகுக்கு அறிமுகம் செய்தவர் கே.பாலசந்தர்.
தான் எடுத்துக் கொள்ளும் கதை மீதான உறுதிப்பாடு மற்றும் தான் நினைத்ததை கலைஞர்களிடமிருந்து தருவிக்க முடியக்கூடிய அவரது திறமையே கலைமட்டத்திலும், வணிக அளவிலும் அவரது பெரும் வெற்றிக்கு காரணம்.
சுமார் 50 ஆண்டுகளாக பாலசந்தர் தனது படங்களை அவருக்கே உரிய தரத்துடனும் உற்சாகத்துடனும் கொடுத்து வந்தார். சின்னத்திரையில் எப்படி சீரியல் இருக்க வேண்டும் என்பதுக்கு அவர் இயக்கிய ரகுவம்சம் ஒரு உதாரணம்.
ஒரு முறை திரைப்பட கல்லூரியில் பேசிய கே.பாலசந்தரிடம் அங்கு மாணவராக இருந்த சிவாஜிராவ் (ரஜினி) "நடிப்பைத் தவிர ஒரு நடிகனிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேட்க கே.பி சிரித்தபடி "கேமிராவுக்கு வெளியே அவர் நடிக்க கூடாது" என்று பதிலளித்தார் இயக்குனர் கே.பாலசந்தர்.
கே.பாலசந்தரின் படங்கள், அதன் கதைக்கரு, கதாபாத்திர உருவாக்கம், கதையாடல் முறை, உத்தி ஆகியவை இன்று சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஆய்வு படமாக இருந்து வருகிறது.
'மழைக்காகத்தான் மேகம் அட கலைக்காகத்தான் நீயும்' என்ற பாடல் வரிகள் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தருக்கு முழு பொருத்தமாக இருக்கும். அவரின் நினைவுநாளான இன்று (23.12.18). பாலசந்தரை நினைத்து போற்றுவோம். கலை இருக்கும் வரை நீங்கள் இருப்பீர்கள் கேபி சார்...