முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் தலைப்பு வைக்காமலே படபிடிப்பை ஆரம்பித்து, படபிடிப்பு முடிவடையும் நேரத்தில் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியிடும்போதுதான் தலைப்பையே அறிவிக்கிறார்கள். அதேப்போல் பல படங்களுக்கு பூஜையே போடுவதில்லை. முதல்நாள் படப்பிடிப்பின்போது கேமரா முன்பு ஒரு தேங்காயை உடைத்து சாமி கும்பிட்டு விட்டு அப்படியே படப்பிடிப்பை தொடங்கி விடுகிறார்கள்.
இந்நிலையில் விஜய் 61 படத்திற்கு தலைப்பு வைக்காமல் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிற செய்தி வெளியானதை அடுத்து மூன்று முகமாக இருக்கலாம் என்று யூகித்த விஜய் ரசிகர்கள் அதுகுறித்து செய்திகளை வெளியிட்டனர். கடந்த ஏப்ரல் 1-ந்தேதி மூன்று முகம் என்ற பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனை மறுத்துள்ள படக்குழுவினர், டைட்டில் குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் விரைவில் அதிகார பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.