ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.சுவாமிநாதன் தயாரிப்பில், நவீன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கடைசி தோட்டா’ திரைப்படத்தில் டத்தோ ராதாரவி, வனிதா விஜயகுமார், ஸ்ரீகுமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் வையாபுரி, கொட்டாச்சி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஒரு நாளில் நடக்க கூடிய மர்மங்கள் நிறைந்த க்ரைம் திரில்லர் ஜானர் திரைப்படமான இதன் முதல் பார்வை போஸ்டர் முதல் சமீபத்தில் வெளியான டைடில் டீசர் வரை அனைத்தும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், ‘கடைசி தோட்டா’ திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொடைக்கானல், பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதில் ராதாரவி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாகவும், வனிதா விஜயகுமார் அசிஸ்டண்ட் போலீஸ் கமிஷ்னராகவும் நடித்திருக்கிறார்கள்.
ஸ்டைலிஷாக நடித்திருக்கும் ராதாரவியை இதுவரை பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் இப்படத்தில் பார்க்கலாம்.
குடும்ப தலைவராக நடித்திருக்கும் ஸ்ரீகுமார், நகைச்சுவைப் பகுதியில் பட்டைய கிளப்பியிருக்கும் வையாபுரி என அனைத்து நடிகர்களும், அவர்களது கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் நிற்கும் வகையில் அமைந்துள்ளது.
வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையில், சினேகன் வரிகளில் இரண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இரண்டு பாடல்களும் ரசிகர்களை கொண்டாட வைக்கும் விதத்தில் சூப்பர் ஹிட் பாடல்களாக வந்திருக்கிறது.
விவி பிரசன்னா, கானா சுதாகர், டெய்ஸி ஆகியோர் பாடல் பாடியுள்ளனர். மோகன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு லோகேஷ்வரன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
முழு படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில், படக்குழுவினர் பின்னணி வேலைகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு குறித்து விரைவில் அறிவிக்க உள்ள படக்குழு அதை தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளது.
விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் உருவாகியுள்ள ‘கடைசி தோட்டா’ க்ரைம் திரில்லர் ஜானர் திரைப்பட ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் விதமாக உருவாகியுள்ளது.