இப்படம் ரசிகர்களின் ஆதரவு காரணமாக திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் கலையரசு கனா படம் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: "எங்கள் தயாரிப்பான 'கனா' எல்லோராலும் பாராட்டப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. வணிக வெற்றியை விட, தியேட்டர்களில் தங்கள் படங்களை ரசிகர்கள் முழுமையாக அனுபவிப்பதை பார்ப்பது தான் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். ரசிகர்களின் பல்ஸை அருண்ராஜா காமராஜ் கச்சிதமாக தெரிந்து வைத்திருக்கிறார். திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பு என் எதிர்பார்ப்புகளை விஞ்சிவிட்டது.
ஒரு திரைப்படம் திரையரங்குகளில் நன்றாக ஓடும்போது, வர்த்தக ரீதியாக வெற்றிகரமாக கருதப்படும். ஆனால் பல பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சிறப்பு திரையிடலுக்காக எங்களை அணுகுவதை நான் நினைத்து கூட பார்க்கவில்லை. மேலும், ரசிகர்களின் வாய்வழி செய்தி மூலம் மிகப்பெரிய விளம்பரமாகி, திரையரங்குகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இன்னும் நல்ல தரமான பொழுதுபோக்கு படங்களை வழங்க இது ஊக்கமாக இருக்கிறது." இவ்வாறு கூறினார்.