ருத்ர தாண்டவம் படத்தைப் பாராட்டி அறிக்கை வெளியிட்ட இயக்குனர் தங்கர் பச்சான்!

வியாழன், 30 செப்டம்பர் 2021 (10:54 IST)
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் அறியப்பட்டவர் தங்கர் பச்சான். சமீபகாலமாக அவர் எந்த படங்களும் இல்லாமல் இருக்கிறார்.

இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள ருத்ரதாண்டவம் படத்தைப் பார்த்து அவர் பாராட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ‘என்னை ஒரு திரைக்கலைஞனாக எண்ணி இதை எழுதவில்லை. தங்களின் 'ருத்ர தாண்டவம்' திரைப்படத்தைக் கண்டுணர்ந்த மக்களில் ஒருவனாகவே இதைத் தெரிவிக்கிறேன். ஒரு படைப்பாளனாக இச்சமூகத்திற்கு உங்களின் கடமையைச் செய்ததுபோல இத்திரைப்படத்தை ஒவ்வொரு மனிதனும் காண வேண்டியதும் ஒரு கடமை என உணர்கிறேன்.

உங்களின் முந்தைய திரைப்படம் 'திரௌபதி' பெரும் வணிக வெற்றியை அடைத்திருந்தாலும் எனக்கு அது பிடித்தமானதாக இல்லை. அத்துடன் ருத்ர தாண்டவம் பார்த்துப் பாராட்டுபவர்களின் பட்டியலையும் அவர்களின் பாராட்டுகளையும் காண நேர்ந்த பொழுது நான் இந்தப் படத்தை பார்த்துத்தான் ஆக வேண்டுமா எனவும் நினைத்தேன். படம் பார்த்து முடிந்ததும் அவ்வாறு எண்ணியதற்காக இப்பொழுது மனம் வருந்துகிறேன்.

மக்கள் நாள்தோறும் சந்திக்கின்ற, காண நேர்கின்ற இன்றைய சிக்கல்களைத்தான் காட்சிகளாகக் கருத்துகளாக முன் வைக்கிறீர்கள் என்பதால் இப்படத்தைப் பார்த்தவர்களால் மற்றவர்களுடன் இதைப்பற்றிப் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. எப்படியாவது இத்திரைப்படத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அதிகமாகவே நீங்கள் பேசுவதைக் காண்கிறேன். இனி அது தேவையில்லை. இனி உங்களின் படைப்பு மக்களிடத்தில் பேசிக்கொள்ளும். மக்களின் பலவீனத்தைப் பணமாக்குவதற்காக பொழுதுபோக்கு எனும் போதைப்பொருளைத் திரைப்படங்களாக உருவாக்கி சமூகத்தைப் பின்னோக்கி சீரழிப்பவர்களுக்கிடையில் விழிப்புணர்வைத் தூண்டும் உங்களின் ருத்ர தாண்டவத்தை மக்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

ஒரு திரைப்படத்தின் வெற்றி, முதலீடு செய்த தொகையைப் பல மடங்காகத் திருப்பி எடுப்பது மட்டுமல்ல. சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்கான விழிப்புணர்வுகளை விதைப்பதும் ஆகும். இத்திரைப்படம் குறித்த குறைகள் எனக்குத் தேவையில்லை. இவ்வணிகச்சூழலில் கிடைத்த நடிகர்களைக்கொண்டு கிடைத்த வசதி வாய்ப்புகளைக்கொண்டு எவரும் பேசத்துணியாதவைகளை திரை ஊடகத்தின் மூலமாகப் பல கோடி மக்களின் இதயங்களுக்குக் கடத்தியிருக்கும் உங்களுக்கும் திரைப்படக்குழுவினருக்கும் இம்மக்களில் ஒருவனாக எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’. எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்