தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் பனீந்திர ஷர்மா, சூதாட்ட விளம்பரங்கள் விதிமுறைகளை மீறி பிரபலங்களால் செய்யப்படுவதாக புகார் அளித்துள்ளார். தெலுங்கு திரைப்பட நடிகர்களும் சமூக வலைதள பிரபலங்களும் இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின்படி, சில சினிமா மற்றும் இணையப் பிரபலங்கள் விளம்பரப்படுத்திய சூதாட்ட செயலிகளில் பலரும் மிகுந்த அளவில் முதலீடு செய்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும், தானும் இதனால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரின் புகாரில், நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ரானா டகுபதி, நடிகை நிதி அகர்வால் உள்ளிட்ட 25 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து, காவல்துறை அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது. தெலுங்கு திரைத்துறையின் முன்னணி பிரபலங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது ரசிகர்கள் மற்றும் திரை உலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.