இந்தி சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திர ஹீரோவாக விளங்கிய பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மொத்த இந்தியாவையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்திற்கு அவர் தனிமனித வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளே காரணம் என முதலில் பேசிக்கொள்ளப்பட்டது.
ஆனால் பாலிவுட் திரையுலகில் அவரை பலர் புறக்கணித்ததால்தான் அவர் மன உளைச்சலுக்கு உள்ளானதாக தற்போது தகவல்கள் பரவி வருகின்றன. பாலிவுட்டில் உள்ள திரை குடும்பங்கள் சிலர் கூட்டமாக இருந்து கொண்டு சுஷாந்த் சிங்கை புறக்கணித்ததாகவும், அவரது படங்களை திட்டமிட்டு தோல்வியடைய செய்தும், அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் செய்தும் வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதில் நடிகர் சல்மான்கான், தயாரிப்பாளர்கள் கரன் ஜோஹர், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டவர்கள் திட்டமிட்டு சுஷாந்த் சிங் பட வாய்ப்புகளை தடுத்ததாகவும் அதனால் சுஷாந்த் சிங் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.