என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ - திரைப்படம் ஆகும் சுஜாதாவின் நாவல்கள்

புதன், 25 ஜூன் 2014 (14:13 IST)
பிரபல எழுத்தாளர் அமரர் சுஜாதாவின் 'என் இனிய இயந்திரா' மற்றும் 'மீண்டும் ஜீனோ' ஆகிய நாவல்களை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய முழு நீளத் திரைப்படமாக ஆக்க இருக்கிறார்கள். இந்த முயற்சியில் சென்னையைச் சேர்ந்த பிக்சல் கிராப்ட் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 
 
தொடராகவும் அதற்குப் பின்னர் புத்தகமாகவும் வெளிவந்த போது பலரையும் கவர்ந்த 'என் இனிய இயந்திரா' மற்றும் 'மீண்டும் ஜீனோ' இரண்டுமே ரசிகர்கள் கண்டு களிக்கத் திரைப்படமாக உருவெடுக்கிறது. இந்தக் கதைகள் வெளி வந்த நேரத்தில், விஞ்ஞான வளர்ச்சியால் எதிர்காலம் எப்படி இருக்கக் கூடும் என்பதை நமக்குக் கண் முன் காட்டியது. விஞ்ஞான வளர்ச்சி பற்றிய விவரமான இந்தக் கதைகளுக்கு விஞ்ஞான வளர்ச்சி அபரிமிதமாக உள்ள இந்தக் காலக் கட்டமே சிறந்த காலம் எனப் பிக்செல் கிராப்ட் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியும் இப்படங்களின் இயக்குநருமான சித்தார்த் தெரிவித்தார்.
 
Virtual graphics என்ற தொழில்நுட்பம் மூலம் நடிகர்களை மட்டுமே நடிக்க வைத்து விட்டு, இடம், பொருள் ஆகிய மற்ற விஷயங்களைத் தொழில்நுட்ப முறையில் ஒரு இடத்தில் இருந்தே படமாக்கும் இந்த முறையால் திரைப்படம் படைப்பது எளிதாகும் என்கிறார் சித்தார்த். மிக பிரம்மாண்ட முறையில் ‘என் இனிய இயந்திரா’ நாற்பது கோடி ரூபாயில் தயாரிக்கப்படுகிறது. Pirates of the caribbean, Iron man 2, மற்றும் கோச்சடையான் படங்களில் பயன்படுத்திய மோஷன் கேப்சர் (Motion capture technology) நுட்பத்தில் இந்தப் படம் உருவாகிறது.

என் இனிய இயந்திரா
 
என் இனிய இயந்திரா, 1980களில் பிற்பகுதியில் எழுதிய சுஜாதா எழுதிய ஒரு அறிவியல் புனைகதை. இது, ஆனந்த விகடன் இதழில் ஒரு தொடராக வெளிவந்தது. இந்த நாவலின் தொடர்ச்சியாக மீண்டும் ஜீனோ எனும் தொடரையும் 1987இல் சுஜாதா எழுதினார்.
 
கி.பி 2022இல் நடப்பதாக இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. ஜீவா எனும் ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியில் இந்தியத் துணைக் கண்டம் இருப்பதாக கதையமைப்பு உள்ளது. மக்களின் வாழ்க்கை அமைப்பு, வாழ்நாட்கள், பெற்றுக்கொள்ளும் குழந்தையின் பால், எண்ணிக்கை என்று அனைத்து விடயங்களிலும் இந்தச் சர்வாதிகாரி தலைமையிலான ஆட்சி, கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. இதில் இருந்து நாட்டை மீட்கப் புறப்படும் ரவி, மனோ எனும் இரு புரட்சிக்காரர்களும் இவர்களுடன் சந்தர்ப்பச் சூழ்நிலையால் இணைந்துகொள்ளும் நிலா எனும் பெண்ணைச் சுற்றியும் கதை நகர்கின்றது.
 
இந்தக் கதையில் முக்கியமான பாத்திரமாக ஜீனோ எனும் இயந்திர நாய் காட்டப்படுகின்றது. சாதாரண செல்லப் பிராணிக்குப் பதிலாக உருவாக்கப்பெற்ற இந்த இயந்திர நாய், மெல்ல மெல்ல தன் அறிவை வளர்க்கிறது. அத்துடன் மனிதர்களைப் போல சிந்திக்கவும் தொடங்குகின்றது. ஆரம்பத்தில் பயம், இரக்கம், பாசம் போன்ற உணர்வுகளை அறியாதிருந்த நாய் மெல்ல மெல்ல அனைத்து மனித இயல்புகளையும் பெறத் தொடங்குகின்றது.
 
என் இனிய இயந்திராவில் ஜீவாவின் ஆட்சியை முறியடித்து புரட்சி செய்து நிலா, ரவி, மனோ இவர்கள் மூவரும் ஆட்சி அமைப்பார்கள். கடைசியில் இப்புரட்சியே ஒரு நாடகம் என்றும் மனோவும் ரவியும் திட்டமிட்டே சதி செய்து, நிலாவை ஒரு பொம்மை மாதிரி பாவித்து ஆட்சியைப் பிடிப்பார்கள். என் இனிய இயந்திராவின் இறுதியில் ரவி, ஜீனோ என்னும் இயந்திர நாய் சிந்திக்கத் தொடங்கிவிட்டது என்று கூறி அதை அக்கக்காக பிரித்து அழித்து விடுவதுடன் முடிவடையும்.

மீண்டும் ஜீனோ
 
மீண்டும் ஜீனோவில் ஜீனோ, தான் சாகவில்லை என்றும் தன்னை அழித்துவிடுவார்கள் என்று தான் முன்னமே யூகித்ததால் தான், தன்னைப் போல் ஒரு இயந்திர நாயைக் கொண்டு கடைசி நிமிடத்தில் தப்பித்ததாகவும் கூறுவதிலிருந்து தொடங்கும். 
 
இது, முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம். அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
 
பலரும் அறிந்த கதையைத் திரைப்படமாக எடுக்கும்போது, மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். அந்த வகையில் இந்த நாவல்களைச் சுவையான திரைப்படமாக எடுப்பது ஒரு சவால். அதை இந்தக் குழு நிறைவேற்றுமா, பார்ப்போம்.

Ref: http://balhanuman.wordpress.com/

வெப்துனியாவைப் படிக்கவும்