'சொர்ணாக்கா' சகுந்தலா மாரடைப்பால் மரணம்

சனி, 14 ஜூன் 2014 (20:08 IST)
தமிழில் விக்ரம் நடித்த தூள் படத்தில் வில்லி கதாபாத்திரமான 'சொர்ணாக்கா'வாக நடித்துப் புகழ் பெற்றவர் நடிகை சகுந்தலா. ரவுடி பெண்களை பிற படங்களில் சொர்ணாக்கா என பேசும் அளவுக்கு இந்தப் பாத்திரம் வலுவாக அமைந்தது. இவர் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். 
 
இவர், ஐதராபாத்தில் உள்ள கொம்பள்ளி பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். நேற்று நள்ளிரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரைச் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல், அவர் மரணம் அடைந்தார்.
 
சகுந்தலா, நடிகர் விஜய் நடித்த சிவகாசி படத்தில் பிரகாஷ்ராஜ் மாமியாராக நடித்துள்ளார். சகுந்தலா தெலுங்கில் முன்னணி வில்லி நடிகையாக இருந்தார். அங்கு இவரை  தெலுங்கானா சகுந்தலா என்றே அழைத்தனர். 1981இல் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 2003இல்  வெளியான ஒக்கடு தெலுங்குப் படம் இவருக்குப் புகழ் பெற்றுத் தந்தது. தொடர்ந்து முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் வில்லி, காமெடி, மற்றும் குணச்சித்திர  வேடங்களில் நடித்தார் சகுந்தலா.
 
சகுந்தலாவின் உடன் ஆந்திர பிலிம் சேம்பர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவரது இறுதி சடங்கு நேற்று மாலையே நடந்தது. அவரது உடலுக்கு தெலுங்குத் திரையுலக நடிகர், நடிகைகள் உள்பட திரையுலகத்தினர் திரளாக அஞ்சலி செலுத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்