கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு மாநிலங்களில் சிக்கி கொண்ட வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப உதவி செய்ததன் மூலமாக மக்கள் அனைவரிடத்திலும் புகழ்பெற்றவர் இந்தி நடிகர் சோனு சூட். தொடர்ந்து விவசாயி ஒருவருக்கு ட்ராக்டர் வழங்கியது, குழந்தைகளை தத்தெடுத்தது என இவர் செய்த பல காரியங்கள் மக்களிடையே சோனுவுக்கு பெரும் மரியாதையை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் நடிகர் சோனு சூட் அரசியலில் இணைய உள்ளதாகவும், அதனால்தான் இதுபொன்ற உதவிகளை செய்து வருவதாகவும் பாலிவுட வட்டாரத்தில் பேச்சு ஒன்று எழுந்துள்ளது. அரசியல் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள சோனு “என்னை கடந்த 10 ஆண்டுகளாக அரசியலுக்கு வர சொல்லி பலர் கேட்டு வருகின்றனர். அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக 100% அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்களுக்காக செயலாற்றுவேன். ஆனால் தற்போது அரசியல், சினிமா என்று ஒரே நேரத்தில் இரண்டு குதிரையில் பயணிக்க விரும்பவில்லை. இப்போது நான் யாருக்கு வேண்டுமானாலும் உதவி செய்யலாம், எந்த கருத்தையும் கூறலாம். எந்த கட்சிக்கும், யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என தெரிவித்துள்ளார்.