சரண்டர் ஆனார் முருகதாஸ் –சர்கார் சமாதானம் பின்னணி

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (11:46 IST)
பரபரப்பாக சென்று கொண்டிருந்த சர்கார் கதைதிருட்டு விவகாரத்தில் வருண் ராஜேந்திரனும் சர்கார் தயாரிப்புக்குழுவும் சமசரம் செய்துகொண்டுள்ளனர்.

சர்கார் டீஸர் ரிலீஸானதும் இந்த கதை என்னுடைய கதை என்று திரைப்பட உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் நிதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அது சம்மந்தமாக திரை எழுத்தாளர்கள் சங்கத்திலும் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட சங்கத்தலைவர் கே பாக்யராஜ் இரண்டு கதைகளையும் படித்துப் பார்த்து இரண்டு கதைகளும் ஒன்றே என அறிவித்தார்.

இது சம்மந்தமாக திரை எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட கடிதம் சமூக வலைதளங்களில் உலா வந்தது. மேலும் வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக பாக்யராஜ் தொலைக்காட்சிகளில் தோன்றி விளக்கம் அளித்தார். அதில் ‘இரண்டு கதைகளும் ஒரே சாராம்சம் கொண்டது. அதனால் படத்தில் மூலக்கதை அல்லது கதை சம்மந்தப்பட்ட எதாவது ஒரு பிரிவில் அவரின் பெயரை போடுங்கள். அவருக்கு சன்மானமான ஒரு தொகையைக் கொடுத்து சமாதானமாக முடித்துக் கொள்ளுங்கள் என்றோம். ஆனால் முருகதாஸ் இதை ஏற்காமல் வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்கிறேன் எனக் கூறிவிட்டார்’ எனக் கூறினார்.

பாக்யராஜின் ஆதரவுக் கடிதம் மற்றும் ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸின் மீது கூறப்பட்டிருந்த கதை திருட்டு விவகாரங்கள் எல்லாம் சேர்ந்து முருகாதாஸின் மீது அதிக சந்தேகத்தை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இயங்குபவர்களும் ஏ ஆர் முருகதாஸுக்கு எதிராகவே தங்கள் கருத்துகளைப் பதிவு செயல்பட்டனர்.

இது எல்லாம் சேர்ந்து சர்கார் படத்தின் வியாபாரத்தைப் பாதிக்கும் என நினைத்த சன்பிக்சர்ஸ் ஏ ஆர் முருகதாஸின் சம்பளத்தையும் பிடித்து வைத்துக் கொண்டதாக செய்திகள் பரவின. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடக்க இருந்தது. வழக்கு விசாரனையில் எழுத்தாளர்கள் சங்கம் வருணுக்கு கொடுத்த கடிதம் முக்கிய ஆவணமாக செயல்படும் எனப் பேசப்பட்டது.

தற்போது திடீர் திருப்பமாக இந்த விவகாரத்தில் இரு தரப்பும் சமாதானம் செய்துகொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. வருண் ராஜேந்திரன் தன் தரப்பு வாதமாக டைட்டில் கார்டில் கதை என்ற இடத்தில் என் பெயர் போடவேண்டும் மற்றும் தனக்கான சன்மானமாக 20 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இப்போது சமரசம் எனத் தகவல் வந்துள்ளதால் அவருக்கான சன்மானம் கொடுக்கப்பட்டதா? சர்கார் டைட்டில் கார்டில் அவர் பெயர் வருமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்