2013 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், தனது பள்ளிகால தோழியும் பாடகியுமான சைந்தவியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குக் கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அதில் “எங்கள் 11 வருட திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக நாங்கள் இருவரும் முடிவெடுத்துள்ளோம். மன அமைதிக்காகவும் இருவரும் ஒருவரின் மேல் ஒருவர் கொண்ட மரியாதைக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளோம். நாங்கள் ஊடகங்கள் மற்றும் நண்பர்களிடம் எங்களின் இந்த முடிவை மதித்து எங்கள் தனியுரிமையை புரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறோம். இதுதான் சிறந்த முடிவு என்று நாங்கள் நினைக்கிறோம். உங்களின் ஆதரவும் புரிதலும் இந்த கடின காலத்தில் எங்களுக்கு பேருதவியாக இருக்கும்” எனக் கூறியிருந்தனர்.
இதையடுத்து அவர்கள் விவாகரத்துக்கு என்ன காரணம் என்று யுடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பலவிதமான கருத்துகளைப் பலரும் பேச ஆரம்பித்தனர். இதையடுத்து சைந்தவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் “தங்களுக்கு கிடைத்த செய்திகளை வைத்துக் கொண்டு பலரும் பலவிதமாக பேசுவது இதயத்தை நோகச் செய்கிறது. எங்கள் விவாகரத்து எந்தவொரு புற காரணத்தாலும் நடக்கவில்லை. எவர் ஒருவரையும் காரணமின்றி அவதூறு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. எங்கள் முன்னேற்றத்துக்காக நாங்கள் சேர்ந்து எடுத்த முடிவு இது. நானும் ஜி வி பிரகாஷும் 24 ஆண்டுகளாக பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்கள். எங்கள் நட்பு இனிமேலும் தொடரும்” எனக் கூறியுள்ளார்.