’பெரியார் படம் வைக்காததற்கு மன்னிக்கவும்’ - ரஞ்சித் வருத்தம்

வியாழன், 28 ஜூலை 2016 (15:51 IST)
‘கபாலி’ திரைப்படத்தில் பெரியாரின் புகைப்படத்தை வைக்காதது தொடர்பாக இயக்குநர் ரஞ்சித் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.
 

 
கபாலி திரைப்படத்தில் அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ், விவேகானந்தர் போன்ற பல அரசியல் தலைவர்களின் படங்களும், சார்லி சாப்ளின், பாப் மார்லே போன்ற கலை ஆளுமைகளின் புகைப்படங்களும் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், தந்தை பெரியாரின் படம் இடம் பெறவில்லை.
 
இந்நிலையில் இது குறித்து ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையின் மாணவப் பத்திரிகையாளர்கள் உடனான கலந்துரையாடலின்போது ஒருவர், ‘பெரியாரின் படத்தை ஏன் தவிர்த்துவிட்டீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்.
 
அதற்கு பதிலளித்த ரஞ்சித், “பெரியார் எனக்கு ரொம்ப பிடிச்ச தலைவர். அவரை நான் தவிர்த்திருந்தால் இந்த இடத்துக்கு வந்திருக்கவே முடியாது. ‘சாதியை மற... மனிதனை நினை’ என்பது பெரியார் சொன்ன முக்கியமான ஸ்டேட்மெண்ட்.
 
நான் பெரியாரை வேண்டுமென்று தவிர்க்கவில்லை. தெரியாமல் விடுபட்டிருக்கலாம். படத்தில் அவர் படம் இல்லை என்பதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்