அரசியல்வாதிகளிடம் பவ்யம், சாமான்யனிடம் அராஜகத்தின் உச்சம்: சாத்தான்குளம் சம்பவம் குறித்து ராஜ்கிரண்

செவ்வாய், 30 ஜூன் 2020 (07:06 IST)
சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் சம்பவம் குறித்து அஜித், விஜய் தவிர கிட்டத்தட்ட அனைத்து கோலிவுட் நடிகர்களும் தங்களுடைய கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்துள்ளனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நடிகர் ராஜ்கிரண் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதுகுறித்து கூறியதாவது:
 
அரசியல் செல்வாக்கு மிக்கவர்களிடம்
பவ்யம் காட்டி, சலாம் போடும்
காவல்துறையினரில் ஒரு பகுதியினர்,
 
சாமானிய மக்களிடம்,
அத்துமீறி, அராஜகத்தின் உச்சத்துக்கே
சென்று விடுகின்றனர்...
 
இவர்களுக்கு பக்கபலமாக,
 
சான்றிதழ் கொடுக்க வேண்டிய மருத்துவர்களும், சிறையில் அடைக்க
உத்தரவிடவேண்டிய நீதிபதிகளும்,
சிறையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய
சிறைத்துறை அதிகாரிகளும்,
தங்களின் கடமைகளை மறந்து,
உடந்தையாகி விடுகிறார்கள்...
 
இதற்கு, அவர்களுக்கு சட்டம் தெரியாதது
மட்டுமல்ல, அப்படியே ஏதாவதொன்று
ஆனாலும், அரசியல்வாதிகளின் தயவால், சட்டத்தை தம் போக்குக்கு
வளைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணமும் தான், இம்மாதிரியான
கயமைத்தனங்களுக்கு மூல காரணம்...
 
சாத்தான் குளம் சம்பவத்துக்கும்
இது தான் அடிப்படை. இதைப்போன்ற
பல சம்பவங்கள் நடந்திருந்தாலும்,
எதிலும் அவர்கள் தண்டிக்கப்படாததால்
ஏற்பட்ட குருட்டு தைரியம் தான்,
அவர்களை எல்லை மீறி போக வைக்கிறது.
 
அதனால் தான், 
குற்றம் சாட்டப்பட்டவர்களை 
சட்டத்தின் அடிப்படையில் கைது செய்து, 
அவர்களை நீதி மன்றத்தில்
நிறுத்துவது தான் நம் வேலை என்பதை
இவர்கள் மறந்து பல காலங்களாகிவிட்டன.
 
சாத்தான் குளம் படுகொலைகளுக்குப்பின்பு,
காவல்துறையின் மிக உயர்ந்த பொறுப்புக்களில் இருக்கும், பல
நேர்மையான அதிகாரிகள்,
 
இவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி,
காவல் துறையினரின் வேலை என்ன,
அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெள்ளத்தெளிவாக
அறிவுறுத்தி, பேட்டிகள் கொடுத்த பின்பும்,
 
கீழ்மட்டத்திலுள்ளவர்கள்
அதை மதிக்காமல், சமூக வலைத்தளங்களில்
மீண்டும் திமிர்த்தனமாக பதிவுகள்
இடுவதை பார்க்கும் பொழுது,
 
தமிழக காவல் துறை, யாருடைய
கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பதை,
ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது...
 
சாத்தான் குளத்தில் படுகொலை செய்யப்பட்ட, தந்தை ஜெயராஜ்,
மகன் பெனிக்ஸ் இருவரின் ஆத்மாவும்,
கருணை மிகுந்த இயேசுபிரானின்
நிழலில் இளைப்பாறி அமைதியடையவும்,
 
அவர்களை அநியாயமாக இழந்து தவிக்கும், அவர்களின் குடும்பத்தினரும்,
சொந்தபந்தங்களும், நண்பர்களும்,
மீள முடியாத வேதனையிலிருந்து
மீண்டு வரவும், இந்தப்படுகொலைகளுக்கு
நீதி வேண்டியும்,
எல்லாம் வல்ல இறைவனிடம்
கண்ணீர் மல்க பிரார்த்திக்கிறேன்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்