மே ஹுன் ரஜினிகாந்த் மை ஹுன் பார்ட் டைம் கில்லராக மாறியது

வியாழன், 2 ஏப்ரல் 2015 (16:21 IST)
மே ஹூன் ரஜினிகாந்த் என்ற பெயரில் இந்தி படத்தை மும்பையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
 
இந்த படத்தில், ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரத்தை தரம் தாழ்ந்து சித்தரித்துள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் நடிகர் ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ படத்தை வெளியிட நிரந்தர தடை விதித்து  உத்தரவிட்டது.
 
இந்நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான மூவர் அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் செய்து கொள்ளப்பட்டதாக நீதிபதிகளிடம் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
 
இந்த சமரச திட்டத்தின்படி, ரஜினிகாந்தின் பெயர் இந்த படத்தின் தலைப்பில் இடம் பெறாது. படத்தின் காட்சிகளில் அவரது உருவப்படங்களும் இடம் பெறாது. ரஜினியின் தனி ஸ்டைலான வசன பாணிகளும் இருக்காது என தயாரிப்பாளர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
 
இப்படத்தில் வரும் ரஜினி மற்றும் அவரது குடும்பத்தார் தொடர்புடைய ஒரு காட்சியும் படத்தில் இருந்து நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிபந்தனைகளை குறிப்பெடுத்து கொண்ட நீதிபதிகள் எக்காரணத்தை கொண்டும் இந்த படத்தின் தலைப்பில் ரஜினிகாந்த் என்ற பெயர் இடம்பெற கூடாது என்று அறிவுறுத்தினர்.
 
இதனை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர், இந்த படத்துக்கு ‘மை ஹூன் பார்ட் டைம் கில்லர்’ (நான் பகுதி நேர கொலையாளி) என பெயர் சூட்ட முடிவு செய்துள்ளதாக கோர்ட்டிடம் தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த புதிய பெயருடன் படத்தை ரிலீஸ் செய்வது தொடர்பாக சென்சார் வாரியத்தையோ, தொடர்புடைய இதர அதிகாரிகளையோ தொடர்பு கொண்டு 10 நாட்களுக்குள் படத்தின் தலைப்பை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்