நற்பெயருக்கு களங்கம் - கோர்ட்டுக்குப் போன ரஜினிகாந்த்

புதன், 17 செப்டம்பர் 2014 (16:12 IST)
இப்படியொரு சர்ச்சை உருவாகும் என்று கடந்த மார்ச் மாதமே, நீங்கள் அழும்வரை சிரிக்க வைக்கவரும் ரஜினிகாந்த் படம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த திரைப்படத்துக்கு எதிராகதான் ரஜினி இப்போது கோர்ட்டுக்கு சென்றுள்ளார்.
இந்திப்பட இயக்குனர் ஃபைசல் ஃசயிப் மே ஹு ரஜினிகாந்த் என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்துள்ளார். தமிழில் அதனை என் பெயர் ரஜினிகாந்த் என்ற பெயரில் வெளியிட உள்ளார். இது ரஜினியின் வாழ்க்கை வரலாறு கிடையாது. அப்படி எடுக்க ரஜினியின் அல்லது அவரது குடும்பத்தாரின் சம்மதம் வேண்டும். ஃபைசலின் திட்டம் அதுவல்ல.
 
அவரது படத்தின் ஹீரோ ஒரு சிபிஐ அதிகாரி. படத்தில் அவரது பெயர் ரஜினிகாந்த். மற்றபடி நடிகர் ரஜினிகாந்துக்கும், இந்தப் படத்துக்கும் துளி சம்பந்தமில்லை. ரஜினிகாந்த் என்ற பெயரை படத்தின் பெயராக்கினால் இந்தியா முழுவதும் எளிதாக படத்தை சந்தைப்படுத்தலாம் என்பது ஃபைசலின் திட்டம்.
 
இதற்குமுன் மல்லிகா ஷெராவத்தின் கதையை படமாக்கினார். அதில் அவரையே நடிக்கக் கேட்டு, மல்லிகா மறுத்து, ராசாபாசமாகியது. பாகிஸ்தான் நடிகை மீராவை ஒரு படத்தில் நடிக்க வைத்தார். அது பிறகு, என்ன கற்பழிக்க முயற்சி செய்தார் என மீரா ஃபைசல் மீது புகார் தரும்வரை சென்றது. 
 
ரஜினிகாந்த் படத்திலும் இதேபோல் எக்கச்சக்க கான்ட்ரவர்ஸிகள். விபசார காட்சிகள் கணக்கில்லாமல் வருவதாகவும் புகார். இந்தப் படம், என்னுடைய பெயரில் வெளியானால் சமூகத்தில் என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என ரஜினி கோர்ட்டுக்கு போயுள்ளார். வழக்கு விசாரணையைக்குப் பின், 22 ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்த நீதிபதி, அதுவரை படத்தை வெளியிட தடையுத்தரவும் பிறப்பித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்