அரசியல் ஆழம் எனக்குத் தெரியும் - லிங்கா படவிழாவில் அரசியல் பற்றி ரஜினி

திங்கள், 17 நவம்பர் 2014 (09:58 IST)
ரஜினி நடித்துள்ள லிங்கா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில்  நடந்தது. விழாவில் பேசிய ரஜினிகாந்த், 
 
"அரசியலுக்கு வருவது எளிது. அதுபோல் படம் பண்ணி விடலாம். ஆனால் அதை மக்கள் ஏற்பது மாதிரி செய்ய வேண்டும்.
 
அரசியல் பற்றி அமீர், விஜயகுமார், வைரமுத்து உள்ளிட்ட பலரும் இங்கு பேசினார்கள். என் மனதில் இருப்பது யாருக்கும் தெரியாது என்று வைரமுத்து சொன்னார். 
 
என்னை பற்றி எனக்கு தெரியாது. நான் ஒரு சூழ்நிலையின் பொருள். சூழ்நிலை எப்படி இருக்கிறதோ அப்படி இருக்கிறேன். அரசியல் என்பது என்ன, அதன் ஆழம் என்ன, என்பது எனக்கு தெரியும். 
 
யார் தோளில் ஏறி போகவேண்டும் எத்தனை பேரை மிதித்து போக வேண்டும் என்பது தெரியும். அப்படி போகும்போது நாம் நினைத்ததை எல்லாம் செய்ய முடியுமா என்ற சந்தேகம் ஏற்படுவதும் தெரியும். இதெல்லாம் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை மாதிரி. ஒரு அலை மாதிரி. அதெல்லாம் ஏற்பட வேண்டும். 
 
அரசியல் ஆழம் எனக்கு தெரியும் என்பதால்தான் தயங்குகிறேன். இங்கு பேசியவர்கள் எல்லோரும் நான் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றனர். அதற்கெல்லாம் பதில் பேசாமல் போனால் திமிர் பிடித்தவன். தலைக்கனம் என்றெல்லாம் என்னை பற்றி நினைத்து விடுவார்கள். அதற்காகத்தான் என் மனதில் இருப்பதை சொன்னேன். இருந்தாலும் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருக்கிறது. அதை நிச்சயம் செய்வேன். "
 
- இவ்வாறு விழாவில் ரஜினி பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்