சூப்பர் ஸ்டார் ரஜினி வேறு … சௌந்தர்யாவின் தந்தை ரஜினி வேறு – ரஜினியின் தந்தைமை !

செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (14:04 IST)
ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவின் மறுமணம் நேற்று கோலாகலமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இதை ஒட்டி ரஜினிக்கு சமூகத்தின் பல தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவிற்கு கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலதிபரான அஸ்வின் என்பவரோடு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்வின் சௌந்தர்யா தம்பதியினர் சட்டப்படி விவாகரத்துப் பெற்று பிரிந்துவிட்டனர். குழந்தை சௌந்தர்யாவிடம் வளர்கிறது. இந்நிலையில் இப்போது சௌந்தர்யாவிற்கும் விசாகன் என்பவருக்கும் கோலாகலமாக மறுமணத்தை நடத்தி வைத்துள்ளார் ரஜினி.

விவாகரத்துப் பெற்ற ஒருவர் தனக்கான வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்வது அவரது சொந்த உரிமை. குழந்தை இருக்கிறது, சமூகம் என்ன சொல்லுமோ என அஞ்சாமல் சௌந்தர்யா எடுத்த துணிச்சலான முடிவுக்கு முழு ஆதரவு தந்து ரஜினி செயல்பட்டுள்ளதாக பாராட்டுகள் எழுகின்றன. ஆனால் இதே ரஜினிதான் படங்களில் பெண் கதாநாயகிகளை ஆண்களுக்கு அடங்கி நடக்கும் படி வற்புறுத்துவதும் சுயமாக சிந்திக்கும் பெண்கள் கூட தனக்குக் கீழ்தான் என்றும், பொம்பளன்னா எப்படி இருக்கனும் தெரியுமா ? என வகுப்புகளும் எடுத்தவர்.

தான் நடித்தப் பெருவாரியான சினிமாக்களில் பெண்கள் பற்றிய பிற்போக்குத்தனமான எண்ணங்களை விதைத்தவர். மறுமணம், விவாகரத்துப் போன்றவற்றின் மீது மரியாதை வரும்படியானக் காட்சிகள் தன் படத்தில் இடம்பெறச்செயததும் இல்லை. ரஜினியின் பிற்போக்குத் தனமான வசனங்கள் மற்றும் காட்சிகளைப் பார்த்து புல்லரித்த்து விசிலடித்த ரசிகர்கள் எல்லாம் இந்த சமூகத்தில் என்ன நிலைப்பாட்டோடு வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தால் ரஜினி இந்த சமூகத்தில் எவ்வளவுப் பிற்போக்குத் தனங்களை விதைத்துள்ளார் என்பது புரியும்.

ஆனால் அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டாரே தனது மகளுக்கு வாழ்க்கையில் ஒருப் பிரச்சனை என வரும்போது முற்போக்காக சிந்தித்து ஒரு சிறப்பான மறுமணத்தை நடத்தி வைத்துள்ளார். அதுவும் சாதாரணமாக அல்ல. சௌந்தர்யாவின் முதல் திருமணம் எந்த அளவு விமரிசையாக நடந்ததோ அதே அளவு கொண்டாட்டஙகளுடன். இந்த கோலாகலங்களின் மூலம் இந்த மறுமணம் எந்த வகையிலும் முதல் திருமணத்தை விட கீழானது இல்லை என்பதை சௌந்தர்யாவும் விசாகனும் நிரூபித்துள்ளனர்.

இதன் மூலம் சினிமாவின் மூலம் தன் ரசிகர்கள் மத்தியில் தான் ஏற்படுத்திய பழமைவாத எண்ணங்களை நிஜ வாழ்க்கையின் தன் செயலின் மூலம் அழிக்க முயன்றுள்ளார். இந்த முற்போக்கான நிகழ்வுக் கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்கள் மனதிலும் சமூக எதார்த்தங்களை விதைக்கும் என்பது மகிழ்ச்சியான விஷயம். சூப்பர் ஸ்டார் ரஜினி வேண்டுமானால் ரசிகர்களின் கைத்தட்டலுக்காகவும் படங்களின் வணிக வெற்றிக்காகவும் பிற்போக்கு வாதியாக இருந்திருக்கலாம்.. ஆனால் சவுந்தர்யா அப்பா ரஜினி தானொரு முற்போக்குவாதி மற்றும் பொறுப்பானத் தந்தை என நிரூபித்துவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்