கேரளாவில் மாஸ்டர் ரிலீஸ் – தொடரும் சிக்கல்!

வியாழன், 7 ஜனவரி 2021 (16:35 IST)
கேரளாவில் இன்னமும் திரையரங்குகள் திறக்கப்படாததால் மாஸ்டர் திரைப்படம் ரிலிஸாவதில் சிக்கல் எழுந்துள்ளது.

பொங்கலன்று மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடுவதாகப் படக்குழு தெரிவித்த நிலையில் நடிகர் விஜய் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். மாஸ்டர் படத்துக்காக மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவைக் காப்பாற்றுவதற்காகவும் இதை செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.  இதையேற்ற தமிழக அரசு சமீபத்தில் திரையரங்கில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த சினிமா துறையினரும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் மத்திய அரசு அந்த உத்தரவை திரும்ப பெறவேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கேரளாவிலும் மாஸ்டர் படம் ரிலிஸாவதில் சிக்கல் எழுந்துள்ளது. கேரளாவில் 50 சதவீத இருக்கைகளோடு திரையர்ங்குகளை ஜனவரி 5 ஆம் தேதி முதல் திறந்துகொள்ளலாம் என அம்மாநில அரசு உத்தரவிட்டது. ஆனால் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த காலத்தில், அதற்கு கணக்கிடப்பட்ட மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ள திரையரங்க உரிமையாளர்கள் திரையரங்குகளை இன்னும் திறக்கவில்லை.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்