ரசீது இல்லாமல் செலவு - அம்பலத்துக்கு வரும் நடிகர் சங்க ஊழல்

சனி, 14 நவம்பர் 2015 (11:29 IST)
நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்றதும், முன்னாள் சங்கத் தலைவர் சங்கத்தின் கணக்கு வழக்குகளை புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். அந்த கணக்குகளை ஆடிட்டர் தலைமையில் தணிக்கை செய்து வந்தனர்.


 
 
நடிகர் சங்க அறக்கட்டளை சார்பில் செலவு செய்யப்பட்ட பல லட்ச ரூபாய்களுக்கு ரசீதோ, முறையான ஆவணங்களோ இல்லாதது கண்டு, புதிய நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். எந்த ரசீதும் இல்லாமல் பல லட்ச ரூபாய்க்கு கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
 
நடிகர் சங்க தேர்தலுக்கு முன், நடிகர் மன்சூர் அலிகான், சென்னை கோடம்பாக்கத்தில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு 11 லட்ச ரூபாய் செலவு ஆனதாக காட்டப்பட்ட கணக்கு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்துக்கு 11 லட்ச ரூபாய் எப்படி செலவானது என்ற அவரது கேள்விக்கு சரத்குமாரோ, ராதாரவியோ பதிலளிக்கவில்லை.
 
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நடிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டதாகக் கூறி பல லட்ச ரூபாய் கணக்கு காண்பித்திருந்தனர். எந்த உறுப்பினருக்கு, எப்போது, யாரால் நடிப்புப் பயற்சி அளிக்கப்பட்டது என்ற மன்சூரின் கேள்விக்கும் பதிலில்லை.
 
இப்போது, முறையான கணக்கு இல்லாமல் செலவு செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சங்கத்தின் பழைய 5 வங்கிக் கணக்குகளை ரத்து செய்து புதிய வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்