“நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்

செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (20:22 IST)
24 மணி நேரத்தில் பல யூனிட்டுகள், பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி “சுயம்வரம்“ என்ற படத்தைத் தயாரித்துத் தமிழ்த் திரையுலகம் ஏற்கெனவே சாதனை படைத்தது. அதை அடுத்து, இப்போது 12 மணி நேரத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உள்ளது. புது முகங்கள் நடிக்கும் நடு இரவு என்ற படத்தில், இந்தச் சாதனையைச் செய்யும் முயற்சியில் இயக்குநர் புதுகை மாரிசா ஈடுபட்டுள்ளார்.

 
செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி மாலை 6 மணிக்குப் படப்பிடிப்பைத் தொடங்கி, மறுநாள் காலை 6 மணிக்குள், அதாவது 12 மணி நேரத்தில் முழுப் படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உள்ளோம். பேய் சம்பந்தப்பட்ட கதை என்பதால் முற்றிலும் புது முகங்களை வைத்து எடுக்கிறோம். பேய் என்பதால் தெரிந்த முகங்கள் எதுவும் தேவையில்லை. எந்தப் பேயாக இருந்தாலும் திகில் இருந்தால் போதும் என்பது என் கருத்து. முக்கிய வேடத்தில் மோனிகா என்ற சிறுமி நடிக்கிறார் என்றார் இயக்குநர் புதுகை மாரிசா.
 
இந்த படத்தின் தொடக்க விழா தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், ஜி.சேகரன் இயக்குநர் சக்தி சிதம்பரம் ஆகியோர் தலைமையில் 15–09–2014 அன்று ஏவி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. 
 
ஜெயலக்ஷ்மி மூவீஸ் என்ற பட நிறுவனம் ஈசார்பாக, வி.எஸ். மோகன்குமார் தயாரிக்கும் “நடு இரவு” படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் புதுகை மாரிசா. ஒளிப்பதிவு - உலகநாதன், இசை - எஸ்.ரமேஷ் கிருஷ்ணா, படத் தொகுப்பு - விஜய் ஆனந்த், கலை - சி.பி.சாமி. 
 
அரை நாளில் உருவாகும் படம், அரை குறையாய் இல்லாமல் இருந்தால் சரி.

வெப்துனியாவைப் படிக்கவும்