பி.ஆர். சோப்ராவின் பிரபலமான 'மகாபாரதம்' தொலைக்காட்சி தொடரில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் பங்கஜ் தீர், தனது 68வது வயதில் மும்பையில் இன்று காலமானார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் சங்கம் இவரது மறைவை உறுதி செய்ததுடன், அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை 4:30 மணிக்கு மும்பை, வைல் பார்லேவில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
பங்கஜ் தீர் பல படங்களில் நடித்திருந்தாலும், 'மகாபாரதம்' தொடரில் அவர் ஏற்ற கர்ணன் பாத்திரம் நாடு முழுவதும் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. "மக்கள் என்னை கர்ணனாகவே ஏற்றுக்கொண்டார்கள். வரலாற்று புத்தகங்களில் கூட, கர்ணனுக்கான எனது புகைப்படத்தை பயன்படுத்துகிறார்கள். எனக்காக கட்டப்பட்ட கோவில்களில் மக்கள் என் சிலையை வழிபடுகிறார்கள்," என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.
பங்கஜ் தீர், ஷாருக்கான் நடித்த 'பாட்ஷா', சல்மான் கான் நடித்த 'தும் கோ நா பூல் பாயேங்கே' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது மகன் நிகிதின் தீர், 'சென்னை எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.