வறுமையில் வாடும் இசையமைப்பாளர் கோவர்தனுக்கு ரூ.10 லட்சம் உதவி - ஜெயலலிதா அறிவிப்பு

புதன், 8 ஜூன் 2016 (15:01 IST)
வறுமையில் வாடும் இசையமைப்பாளர் கோவர்தனுக்கு ரூ.10 லட்சம் உதவி - ஜெயலலிதா அறிவிப்பு  வறுமையில் வாடும் இசைஅமைப்பாளர் கோவர்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 


 
 
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது -  பிரபல இசைஅமைப்பாளர் கோவர்தன், இசையமைப்பாளர்களான எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, தேவா என பல புகழ் பெற்ற இசையமைப்பாளர்களிடம் உதவி இசையமைப்பாளராக பல வருடங்கள் பணியாற்றியவர் ஆவார்.
 
தற்போது தனது மனைவியுடன் சேலத்தில் வசித்து வரும் 88 வயதான கோவர்தன், தான் எவ்வித வருமானமும் இல்லாமல் வறுமைச்சூழலில் வாழ்ந்து வருவதாகவும், தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு நிதியுதவி வழங்கி தங்களைக் காப்பாற்றுமாறும் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
 
கோவர்தனின் வேண்டுகோளை கனிவுடன் பரிசீலித்த, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து கோவர்தனுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
 
இந்த 10 லட்சம் ரூபாய் கோவர்தன் பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக வைக்கப்படும். இந்த வைப்பு நிதியில் இருந்து வட்டியாக மாதந்தோறும் ரூ.8,125 கோவர்தனுக்கு கிடைக்கப்பெறும்.
 
மேலும், கோவர்தன் செவித்திறன் குறைபாட்டை நீக்கும் வகையில் அவருக்கு அரசு பொது மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை அளித்து, காதொலிக் கருவி ஒன்றினை வழங்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
- இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்