ரஜினி, ராக்லைன் வெங்கடேஷ் மன்னிப்பு கேட்க வேண்டும்

வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (10:08 IST)
லிங்கா பிரச்சனை எதிர்பார்த்ததுபோல் சுமூகமாக முடியும் என்று தோன்றவில்லை. இன்று இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடக்கயிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் ரஜினியும், ராக்லைன் வெங்கடேஷும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.
லிங்கா விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் 33 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு போராடி வருகின்றனர். பேச்சுவார்த்தையின் போது எட்டு கோடி ரூபாய் நஷ்டத்தை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும், 25 கோடி ரூபாய் நஷ்டஈடாக தந்தால் போதும் என இறங்கி வந்தனர். ஆனால் ரஜினி தரப்பு அதற்கு உடன்படவில்லை.
 
ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில், பெங்களூரு அமர்வு நீதிமன்றத்தில் வெங்கடேஷ் தன்னையும், ரஜினியையும், லிங்காவையும் விமர்சிப்பவர்கள், போராட்டம் நடத்துகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் லிங்கா, ரஜினி, வெங்கடேஷ் குறித்து பேசவோ, பேட்டி தரவோ, போராட்டம் நடத்தவோ கூடாது என்றும் மீறினால் நீதிமன்ற நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் எனவும், விநியோகஸ்தர்கள் வரும் 23 -ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
 
இது விநியோகஸ்தர்களை ஆத்திரப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் எஸ்.ஸ்ரீதர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
பேச்சுவார்த்தை நடக்கும் போது தமிழக விநியோகஸ்தர்கள் மற்றும் ஊடகங்களுக்கு எதிரான தடை வாங்கிய ராக்லைன் வெங்கடேஷின் செயலை அவர் வன்மையாக கண்டித்துள்ளார். லிங்கா பிரமோஷனுக்கு ஒவ்வொரு ஊடகத்தையும் பயன்படுத்திக் கொண்டவர்கள், படம் குறித்த விமர்சனத்தையும் அதேபோல் எதிர்கொண்டிருக்க வேண்டும். அதைவிடுத்து ஜனநாயகத்தின் நான்காவது தூணை முடக்கப் பார்க்கக் கூடாது என்றும், ரஜினிக்கு தெரியாமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அதனால் ரஜினி, ராக்லைன் வெங்கடேஷ் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்