லிங்கா பிரச்சனை - அனுபவம் இல்லாத விநியோகஸ்தர்களால் சினிமா சீரழிவதாக தாணு காட்டம்

புதன், 27 மே 2015 (11:26 IST)
லிங்கா பிரச்சனை மீண்டும் தமிழ் சினிமாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. லிங்கா படத்தால் நஷ்டம் ஏற்பட்டவர்கள் 33 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டனர். ரஜினி தரப்பு தருவதாகச் சொன்ன 12.50 கோடியை பெற்றுக் கொள்வதாக முடிவானது.
இதில் 5.9 கோடி மட்டுமே இதுவரை பிரித்து தரப்பட்டது. மீதமுள்ள பணம் தரப்படவில்லை. இதனை முன்னிட்டு மீண்டும் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தினர். அவர்கள் தாணுவையும், திருப்பூர் சுப்பிரமணியத்தையும் குற்றம்சாட்டினர்.
 
திருப்பூர் சுப்பிரமணியம் பேசுகையில், 6 கோடிதான் எங்களிடம் தரப்பட்டது. அதனை பிரித்து தந்துவிட்டோம். மீதி பணத்தை லிங்கா தயாரிப்பாளர் தனது மகளின் திருமணம் முடிந்தபின் தருவதாக கூறியுள்ளார். அது வந்ததும் பிரித்து தர உள்ளோம் என்றார். 
 
மேலும், இந்தப் பிரச்சனையை முன்னின்று பெரிதுபடுத்திய விநியோகஸ்தர் சிங்காரவேலன் தாணுவிடம் 35 லட்சங்கள் மற்றவர்களுக்கு பிரித்து தருவதாகக்கூறி வாங்கிச் சென்றார். அது என்னவானது? முதலில் அதற்கு கணக்கு சொல்லச் சொல்லுங்கள் என்றார்.
 
தாணுவும் சிங்காரவேலன் மீது குற்றஞ்சாட்டினார். அந்தந்த பகுதி விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் சேர்ந்து வந்தால் பணத்தை பிரித்து தருகிறேnம். இவர்கள் தனித்தனியாக வந்து பணத்தை கேட்கிறார்கள். அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. விநியோகத்தில் அனுபவம் இல்லாதவர்களால் சினிமா சீரழிகிறது. அதற்கு ஒரு முடிவு கட்டுவோம் என்றார்.
 
இது ஒருபுறமிருக்க, நஷ்டஈடு தொகையை முழுமையாக வாங்கியதாகச் சொல்லப்படும் சிங்காரவேலன், ரஜினி உடனே வேந்தர் மூவிஸுக்கு படம் நடித்து தர வேண்டும். இல்லையெனில் மேலும், 15 கோடி ரூபாய் நஷ்டஈடாக தர வேண்டியிருக்கும் என்று மிரட்டும் தொனியில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்