மஜீத் மஜிதிக்கு காவியத்தலைவனை திரையிட்டுக் காட்டுவேன் - ரஹ்மான்

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (10:38 IST)
காவியத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஹ்மான் கலந்து கொண்டார். அதன் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் வெளியிட்ட ஒரு தகவலை அனைவரும் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

ஹாலிவுட் படம் ஒன்றுக்கு ரஹ்மான் இசையமைத்துக் கொண்டிருந்த போதுதான் காவியத்தலைவன் கதை கேட்டு அதற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டார்.

காவியத்தலைவனுக்காக தான் வேலை பார்த்து வந்த ஹாலிவுட் படத்திலிருந்து விலகி, 1930 களின் இசை குறித்து ஆராய்ச்சி செய்து, பாடல்களுக்கான ட்யூன்களை உருவாக்கினார்.

இந்தத் தகவல்களை பகிர்ந்து கொண்டவர், ஈரானிய இயக்குனர் மஜீத் மஜிதை இரு வாரங்கள் முன் சந்தித்து பேசியதாக குறிப்பிட்டார். அப்போது அவர் ரஹ்மானிடம், நான் உங்க படங்களையெல்லாம் பார்க்கிறேன். ஏன் உங்க கலாச்சாரத்தைவிட்டு, வெஸ்டர்ன் கலாச்சாரத்தையே பின்பற்றி வர்றீங்க என்று கேட்டிருக்கிறார்.

அந்த சம்பவத்தை பற்றி கூறிய ரஹ்மான், காவியத்தலைவன் படத்தை அவருக்கு திரையிட்டுக் காண்பிப்பேன் என்றார்.

இதனை ரஹ்மான் காவியத்தலைவன் படத்துக்கு அளித்த பாராட்டாக கருதி அனைவரும் கரவொலி எழுப்பினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்