சர்ச்சைக்கு சமாதிகட்டி 100 நாள்களை தொட்ட கத்தி

வியாழன், 29 ஜனவரி 2015 (13:04 IST)
சென்ற வருடம் அதிக சர்ச்சைக்கு ஆளான படம் கத்தி. கத்தியை தயாரித்த சுபாஷ்கரண் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் நெருங்கிய நட்பு வட்டத்தை சேர்ந்தவர், ராஜபக்சயின் உறவினர்களுடன் தொழில் கூட்டணி வைத்திருக்கிறார் என்றுகூறி அறுபதுக்கும் மேற்பட்ட அமைப்புகள், அரசியல் கட்சிகள் இணைந்து கத்திக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

 
படத்தை வெளியிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் கத்தியின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜெயா வாங்கியது. அதன் பிறகு போராட்டத்தின் வேகம் தணிந்தாலும், சென்னை சத்யம் திரையரங்கில் சிலர் பெட்ரோல் குண்டு வீசியது பரபரப்புக்குள்ளானது.
 
இந்த சர்ச்சைகளே படத்துக்கு நல்ல விளம்பரத்தை தேடித்தர, விஜய்யின் முந்தையப் படங்களுக்கு இல்லாத ஓபனிங் கத்திக்கு கிடைத்தது. விஜய்யின் சினிமா வாழ்க்கையில் கத்திதான் அதிக வசூல் செய்த படம் என்கிறார்கள்.
 
இன்று கத்தியின் 100 -வது நாள். சென்னையில் 3 திரையரங்குகளில் கத்தி 100 நாளை கடந்துள்ளது. இன்றைய சூழலில் இதனை சாதனை என்றே சொல்ல வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்