மீண்டும் தள்ளிப் போகிறது உத்தம வில்லன் வெளியீடு

புதன், 1 ஏப்ரல் 2015 (11:35 IST)
கமல் நடித்த மூன்று படங்கள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. ஆனால் மூன்றில் ஒரு படம்கூட வெளியாகவில்லை என்பது கமலுக்கும், அவரது ரசிகர்களுக்கும் வருத்தமான செய்தி.
 

 
"விஸ்வரூபம் 2 முடிந்துவிட்டது. அதன் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் படத்தை ஏன் வெளியிடவில்லை என தெரியவில்லை. படம் இன்னும் வெளியாகாமலிருப்பதற்கு அவர் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை" என கமல் சமீபத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
 
உத்தம வில்லனாவது அறிவித்தபடி ஏப்ரல் 10 வெளியாகுமா என்றால், அதுவும் சந்தேகம் என்கிறார்கள். உத்தம வில்லன் ஏப்ரல் 2 வெளியாகும் என்றுதான் முதலில் அறிவித்திருந்தனர். பிறகு ஏப்ரல் 10 என்றனர். இப்போது பத்தாம் தேதியும் படம் திரைக்கு வருவதாக இல்லை.
 
கமலின் மூன்று படங்கள் தயாராகியும் இப்படி வெளியீட்டிற்கு காத்திருப்பது அவரது சினிமா வாழ்க்கையிலேயே இதுதான் முதல்முறை என்பது கவலைக்குரியது.

வெப்துனியாவைப் படிக்கவும்