இந்நிலையில் இதன் பாடல் குறுந்தகட்டை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டு பேசுகையில், நாம் ஒரு மாற்றத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம். இனிவரும் விழாக்களில் நாம் மாலைகள், பொன்னாடைகளை தவிர்ப்போம். வரும் வழியில் சில பேனர்கள் பார்த்தேன். நம் சாலைகளில் வழிமறிக்காமல், எங்கு அனுமதி இருக்கிறதோ, அங்கு மட்டுமே வைக்க வேண்டும்.
முன்பு எல்லாமே நன்றாக இருந்தது. இப்போது எல்லாமே கெட்டுவிட்டது. மாற்றத்தை நீங்கள் தான் செய்யப்போகிறீர்கள். நான் செய்துவிடுவேன் என்று நம்பி மல்லாந்து சாய்ந்துவிடாதீர்கள். இந்த நாட்டை மாற்றும் வலிமை உங்கள் கையில் இருக்கிறது. ‘எப்படி சார் நீங்களெல்லாம் தாக்குப்பிடிக்க போறீங்க? என்று கேட்கலாம். 5 ஆயிரத்துக்கும், 10 ஆயிரத்துக்கும் ஆசைப்பட்டு நம் உரிமைகளை விட்டுத்தருவது எவ்வளவு பெரிய நஷ்டம் என்பதை நாம் உணரவேண்டும்.
இந்த பாடல்களே உங்கள் உற்சாகத்துக்கு தான். என் உற்சாகம் நீங்கள் சொல்லும் சேதிகளில், படும் கவலைகளில் இருந்துவரும். உங்கள் கோபம் அதில் எனக்கு தெரியவேண்டும். எனக்கும் அந்த கோபம் உண்டு. இரண்டையும் கலந்து புதிய சமையல் செய்வோம்.
இந்த கட்சி மக்களுக்காகவும், ஒரு காரணத்துக்காகவும் தொடங்கப்பட்டது. அது என்ன காரணம்? என்று அனைவருக்கும் தெரியும். அந்த காரணம், அந்த குறை நீங்கும் வகையில் இந்த கட்சி இருந்தாக வேண்டும். அரை நூற்றாண்டு காலம் நடந்திருக்கிறது இந்த சீரழிவு. இன்னும் அரை நூற்றாண்டு காலம் இந்த மக்கள் நீதி மய்யம் செழிப்புடன் இருந்தால் தான் இந்த மாற்றம் ஏற்படும். அந்த அதிசய மரம் காய்க்கும் பழத்தை திண்பது எப்போது? என்று தெரியாது. ஆனால் விதை நாம் போட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டது. இனிமேல் கட்சி நிதி பெறுவோம். அதற்கான கணக்கையும் காட்டுவோம். என்று கமஹாசன் பேசியுள்ளார்.