ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

புதன், 18 ஜனவரி 2017 (17:47 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,  அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். தமிழர்களின் கலாச்சாரம்,  பாரம்பரியம், வீரவிளையாட்டு என கூறி ஜல்லிக்கட்டு தடையை நீக்க போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை அலங்காநல்லூரில் கிராம மக்கள் ஒன்றுக்கூடி ஜல்லிக்கட்டுக்காக போராட்டத்தை துவங்கிய நிலையில், சென்னை மெரினா,  கோவை, நெல்லை என தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இளைஞர்கள் இரவு பகல் பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர்.
 
ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக் கோரியும் நடிகர் சங்கம் சார்பில் வருகிற ஜனவரி 20ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உண்ணாவிரத  போராட்டம் நடத்தப்படும். அவை ஒரு நாள் உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும், அன்றைய தினம் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும். இதில் அனைத்து நடிகர், நடிகைகளும் பங்கேற்பார்கள் என்றும் நடிகர் சங்க  துணை தலைவர் பொன்வண்ணன் அறிவித்துள்ளார். 
 
இதில் பங்கேற்க தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், ஸ்டன்ட் இயக்குனர்கள் சங்கம், என சினிமாத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுக்கும் நடிகர் சங்கம் சார்பில் அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்