இயக்குனர் பாரதிராஜா அறிக்கைக்கு அப்படத்தின் இயக்குனர் சந்தோஷ், டுவிட்டரில் பதிலடி கொடுத்த நிலையில் தற்போது தான் தெரிவித்த கருத்துக்கு சந்தோஷ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழில் ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார், தற்போது தானே இயக்கி நடித்துள்ள படம் “இரண்டாம் குத்து”. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் ஆடையின்றி செய்திதாளால் உடலை மூடியிருக்குமாறு வெளியான போஸ்டர் இளைஞர்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில் அந்த போஸ்டர் விளம்பரம் குறித்து பேசியுள்ள இயக்குனர் பாரதிராஜா “இரண்டாம் குத்து பட விளம்பரத்தை கண்ணால் பார்க்கவே கூசுகிறது. சினிமா வியாபாரம்தான். ஆனால் இப்படி கேவலமான நிலைக்கு அந்த வியாபாரம் வந்து விட்டது வேதனை தருகிறது. கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தை போதிக்கவா வந்தோம்” என கேள்வியெழுப்பியுள்ளார்.
இதனிடையே இயக்குனர் பாரதிராஜா அறிக்கைக்கு அப்படத்தின் இயக்குனர் சந்தோஷ், டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், அவர் மீது மரியாதை இருக்கிறது. 1981ல் வெளிவந்த ‘டிக் டிக் டிக்’ படத்தைப் பார்த்து கூசாத கண்ணு இப்ப கூசிருச்சோ என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இயக்குநர் சந்தோஷ் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், இரண்டாம் குத்து படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டேன். இதற்கு பாரதிராஜா எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதைப் படித்துப் பார்த்து, வந்த கனத்தின் வெப்பத்தில் எனது டுவிட்டர் பதிவில் ஒரு டுவீட் போட்டுவிட்டேன். என்ன செய்கிறோம் என்று அவசரத்தில் தெரியாமல் செய்தது. நான் போட்ட டுவீட்டிற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். பாரதிராஜாவின் சாதனைகளில் 1 சதவீதமாவது செய்துவிடமாட்டோமா என்று இளைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவரது அறிக்கைக்கு எதிர்வினையாற்றி இருக்கக்கூடாது. அடுத்து வரும் போஸ்டர் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
A regret, An Apology & A promise to @offBharathiraja sir and everyone