தமிழகம், கேரளாவை அடுத்து குஜராத் முதல்வரையும் கவர்ந்த ராகவா லாரன்ஸ்

ஞாயிறு, 17 மே 2020 (17:10 IST)
தமிழகம், கேரளம் மட்டுமின்றி குஜராத் முதல்வரையும் தனது சேவை மனப்பான்மையால் ராகவா லாரன்ஸ் கவர்ந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
ஏற்கனவே தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய் கொடுத்து தமிழக அரசின் பாராட்டை பெற்ற ராகவா லாரன்ஸ், சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவரின் தாயார் கேரள மருத்துவமனையில் காலமாகிவிட்டதாகவும் அவருடைய உடலை தமிழகத்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யும்படியும் அதற்கு தேவையான செலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்திருந்தார். ராகவா லாரன்ஸ்ஸின் இந்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொண்ட கேரள முதல்வர் அந்தப் பத்திரிகையாளர் தாயாரின் உடலை தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் குஜராத் மாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழர் குடும்பம் ஒன்றை மீட்டெடுக்க குஜராத் முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலித்த குஜராத் முதல்வர், உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கலெக்டருக்கு அந்த குடும்பத்திற்கு தேவையானதை வழங்க உத்தரவிட்டார்.
 
இதனையடுத்து உடனடியாக செயல்பட்ட கலெக்டர் அந்த குடும்பத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் அரசு சார்பில் வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி அந்த குடும்பத்தினர் தமிழகம் செல்ல விரும்பினால் அதற்கான வாகன ஏற்பாட்டையும் செய்து தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார். இதனை அடுத்து ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் குஜராத் முதல்வருக்கும் கலெக்டருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் 
 
தமிழகம், கேரளா, குஜராத் என மூன்று மாநில முதல்வர்களையும் கவர்ந்துள்ள ராகவா லாரன்ஸுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்