விஜய் சேதுபதியும் கைவிட்டார், கௌதம் கார்த்திக்கை இயக்கும் நலன் குமாரசாமி

புதன், 1 அக்டோபர் 2014 (10:29 IST)
சூது கவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார். ஒரேயொரு படத்தை மட்டும் தழுவினால் கண்டுபிடித்து விடுவார்கள். அதனால் கதைக்கருவை ஒரு படத்திலிருந்து எடுத்தால் காட்சிகளை வேறொரு படத்திலிருந்தும், காமெடியை இன்னொரு படத்திலிருந்தும், கிளைமாக்ஸை பிறிதொரு படத்திலிருந்தும் உருவ வேண்டும். 
 
அப்படிதான் தீயா வேலை செய்யணும் குமாரு படத்துக்கு திரைக்கதை அமைத்தேன் என நெருங்கிய நட்பு வட்டாரத்தில் பெருமையடித்துக் கொள்கிறார். அவரது சூது கவ்வும் படமும் அப்படிதான்.
 
நிற்க. பேச வந்த விஷயம் அதுவல்ல. சூகவ்வும் படத்துக்குப் பிறகு மை டியர் டெஸ்பரடோ என்ற கொரிய படத்தை தமிழில் எடுப்பதற்காக மை டியர் டெஸ்பரடோ படத்தின் இயக்குனரிடம் முறைப்படி அனுமதி வாங்கியிருந்தார் நலன். 
 
அந்தக் கதையைதான் எஸ்கிமோ காதல் என்ற பெயரில் சூர்யாவிடம் சொன்னார். முதலில் நடிக்க ஒப்புக் கொண்டவர் பிறகு காதல் கதை என்பதால் அஞ்சானுக்கு ஷிப்டானார்.
 
சூர்யா இல்லை என்றதும் விஜய் சேதுபதியை வைத்து அடுத்தப் படத்தை தொடங்க திட்டமிட்டார். விஜய் சேதுபதியும் பிஸி என கைவிரிக்க தற்போது கௌதம் கார்த்திக்கிடம் கதை கூறியிருக்கிறாராம். விரைவில் அடுத்தப் படம் யாருடன் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்