யாருக்கும் ஆதரவில்லை - விஜய் சார்பில் அறிக்கை

செவ்வாய், 10 மே 2016 (11:12 IST)
இந்தத் தேர்தலில் விஜய் ரசிகர்கள் திமுகவுக்கு பல இடங்களில் ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


 


விஜய் தரப்பிலிருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படியே விஜய் ரசிகர்கள் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததாக கூறப்பட்டு வருகிறது. அதனால், அதிமுக தரப்பு விஜய் மீது கடும் சினத்தில் உள்ளது.
 
இந்நிலையில், அகில இந்திய இளைய தளபதி விஜய் தலைமை நற்பணி இயக்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
 
வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம் நடுநிலையை வகிக்க முடிவு செய்துள்ளது. அதாவது எந்தக் கட்சிக்கும் நாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அளிக்கவில்லை. அதே சமயம் இளையதளபதி ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு தகுந்தாற்போல, தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம்.
 
ஆனால், இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக்கூடாது. இந்த நிலைப்பாட்டை நான் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை நேரில் அழைத்தும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தெளிவுபட கூறி இருக்கின்றேன்.
 
மேலும், இயக்கத்தின் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது, இயக்கத்தின் சார்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருக்கின்றேன். இந்நிலையில் சில ஊடகங்களில் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளித்ததுபோல் செய்திகள் வருகின்றன. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை தெளிவுபட தெரிவித்துக் கொள்கிறேன்.
 
எனவே, இளைய தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் எந்தவித குழப்பம் அடையாமல் தங்கள் விருப்பம்போல் வருகின்ற சட்டமன்ற தேர்தலில், தங்கள் விருப்பமான கட்சிக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது என்று மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்